களியக்காவிளை சந்தை ஏலத்தை நிறுத்த கோரிக்கை; கலெக்டரிடம், வியாபாரிகள் மனு


களியக்காவிளை சந்தை ஏலத்தை நிறுத்த கோரிக்கை; கலெக்டரிடம், வியாபாரிகள் மனு
x
தினத்தந்தி 17 March 2020 3:45 AM IST (Updated: 16 March 2020 7:59 PM IST)
t-max-icont-min-icon

களியக்காவிளை சந்தை ஏலத்தை நிறுத்த கோரி கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் வியாபாரிகள் மனு அளித்தனர்.

நாகர்கோவில், 

குமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். அப்போது கல்வி உதவித்தொகை, பட்டா மாற்றம், மாற்றுத் திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி மொத்தம் 568 மனுக்கள் அளிக்கப்பட்டன.

கூட்டத்தில் களியக்காவிளை தினசரி சந்தை வியாபாரிகள் நலசங்க (தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையுடன் இணைக்கப்பட்டது) தலைவர் பிராங்கிலின், செயலாளர் சுனில், வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் டேவிட்சன் மற்றும் வியாபாரிகள் திரளாக வந்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

குமரி மாவட்டம் களியக்காவிளையில் தினசரி சந்தை உள்ளது. இங்கு வழக்கமாக நடைமுறையில் இருந்து வரும் நுழைவு கட்டண வசூல் முறையை மாற்றம் செய்து விதவிதமான தீர்வை வசூல் முறையை ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் 200 சதவீதம் அளவுக்கு கட்டணம் உயரும்.

இதுதொடர்பான பொது ஏலம் மற்றும் பொது ஒப்பந்தபுள்ளி கோருதல் 20–ந் தேதி களியக்காவிளை பேரூராட்சி சார்பில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே சந்தை ஏலம் மற்றும் ஒப்பந்தபுள்ளி கோருதல் ஆகியவற்றை நிறுத்த வேண்டும். வியாபாரிகளுடன் கலந்தாலோசித்து சந்தை நுழைவு கட்டணத்தை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதே போன்று பச்சை தமிழகம் கட்சி மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் பொதுமக்கள் திரளாக வந்து அளித்த மனுவில், “அகஸ்தீஸ்வரம் தாலுகா கொட்டாரம் பேரூராட்சி பாலகிருஷ்ணன் நகர் பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாளாக வசித்து வருகிறார்கள். இந்த மக்களுக்கு தற்போது வரை அரசால் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. இதனால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். அழகப்பபுரம் பேரூராட்சி பொட்டல்குளம் பகுதியில் அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை மீட்டு நிலமற்ற ஏழைகளுக்கு வழங்க வேண்டும்“ என்று கூறப்பட்டிருந்தது.

காரங்காடு குசவன்குழியை சேர்ந்த தங்கராணி என்பவர் உறவினர்களுடன் வந்து அளித்த மனுவில், “என் கணவர் மரியஸ்டீபன்ராஜ் கூலி வேலைக்காக துபாய் சென்றார். அங்கு வேலை செய்துகொண்டு இருந்தபோது கீழே விழுந்ததால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் துபாயில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சுயநினைவு இன்றி உள்ளார். அவருக்கு சரியான சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே என் கணவரை இந்திய தூதரகம் மூலம் சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது.

இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் பதில்சிங், அஷ்வினி மற்றும் பலர் அளித்த மனுவில், “கல்வி நிலையங்களில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். அனைத்து கல்வி நிலையங்களிலும் சானிட்டரி நாப்கின் இலவசமாக வழங்க வேண்டும். பெண்சிசு கொலையை முற்றிலுமாக தடுத்து நிறுத்துவதோடு பெண்சிசுக்களை கருகலைப்பு செய்வதையும் தடுக்க வேண்டும். இச்செயல்களில் ஈடுபடும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

அகில இந்திய மக்கள்நல இயக்க நிர்வாகிகள் அளித்த மனுவில், “நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டறியும் கருவி பழுதடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நோயாளிகள் அவதிப்படுகிறார்கள். எனவே புற்றுநோய் கட்டறியும் கருவியை சரிசெய்ய வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

முன்னதாக கூட்டத்தில் கிள்ளியூர் தாலுகாவில் விபத்தில் பலியான ரமேஷ் என்பவரின் குடும்பத்துக்கு முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் பிரசாந்த் வடநேரே வழங்கினார். இந்த நிதியை ரமேஷின் மனைவி சுஜா பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் வருவாய் அதிகாரி ரேவதி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அபுல்காசிம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story