தரமான சாலை அமைக்காததை கண்டித்து பொதுமக்கள் மறியல்; போக்குவரத்து பாதிப்பு
வந்தவாசி அருகே தரமாக சாலை அமைக்காததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 1½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வந்தவாசி,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி- விளாங்காடு சாலையில் ஆரியாத்தூர் கிராமம் உள்ளது. ஆரியாத்தூர் கூட்ரோட்டில் இருந்து விளாங்காடு ஏரி அருகில் வரை கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.56 லட்சம் செலவில் 1½ கிலோமீட்டர் தூரத்திற்கு தார் சாலை மற்றும் 4 சிறுபாலங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து 4 சிறுபாலங்கள் கட்டப்பட்டடு கடந்த 3 நாட்களுக்கு முன் தார்சாலை அமைக்கப்பட்டது. தார்சாலை போடப்பட்டு 3 நாட்களே ஆனநிலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து வருவதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை தரமாக அமைக்கப்படவில்லை என கூறி நேற்று காலை 9 மணியளவில் ஆரியாத்தூர் கூட்டுச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் கைகள் மூலமே தார்ச்சாலையில் இருந்து ஜல்லிகளை வாரி எடுத்து காண்பித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கீழ்கொடுங்காலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜமீஸ்பாபு, ஏட்டு மணிபாலன் மற்றும் போலீசார், வந்தவாசி ஒன்றிய பொறியாளர் மனோகரன், உதவி பொறியாளர் ராஜேந்திரன், வருவாய் ஆய்வாளர் சதிஷ் ஆகியோர் விரைந்து சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி பொதுமக்களை சமரசம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். சாலைமறியல் காரணமாக அந்த சாலையில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story