கோத்தகிரி அருகே, 150 அடி பள்ளத்தில் லாரி உருண்டு விழுந்து டிரைவர் பலி


கோத்தகிரி அருகே, 150 அடி பள்ளத்தில் லாரி உருண்டு விழுந்து டிரைவர் பலி
x
தினத்தந்தி 16 March 2020 10:30 PM GMT (Updated: 16 March 2020 4:53 PM GMT)

கோத்தகிரி அருகே 150 அடி பள்ளத்தில் லாரி உருண்டு விழுந்து டிரைவர் பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொட்டக்கம்பை கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மகன் பாஸ்கரன்(வயது 25). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ஜல்லி கற்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் ஏற்றப்பட்ட லாரியில் கொட்டக்கம்பையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு புறப்பட்டார். தட்டப்பள்ளம் அருகில் ஏலக்காய் முடக்கு என்ற இடத்தில் உள்ள ஒரு வளைவில் லாரியை டிரைவர் பாஸ்கரன் திருப்ப முயன்றார். அப்போது திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு 150 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இதில் லாரி அப்பளம் போல நொறுங்கியது. மேலும் லாரிக்குள் இருந்த டிரைவர் பாஸ்கரன் பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதை கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், கோத்தகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார், டிரைவர் பாஸ்கரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுத சம்பவம் காண்போரின் கண்களை குளமாக்கியது. இந்த விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். 150 அடி பள்ளத்தில் லாரி உருண்டு விழுந்து டிரைவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story