வீட்டை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு


வீட்டை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 March 2020 5:00 AM IST (Updated: 16 March 2020 10:30 PM IST)
t-max-icont-min-icon

வீட்டை சேதப்படுத்தியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். இந்நிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்திருந்த முதியவர் ஒருவர் திடீரென்று பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை தலையில் ஊற்றியவாறு ஓடி வந்தார். இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிச்சென்று அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலையில் உள்ள ஏரிக்கரையை சேர்ந்தவர் ராஜா (வயது 65) என்பது தெரியவந்தது. ஆதிதிராவிடர் சாதியை சேர்ந்த அவர் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஏரிக்கரையில் புறம்போக்கு நிலத்தில் குடிசை வீடு கட்டி தனியாக வசித்து வந்தார். அந்த இடத்திற்கு பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். மேலும் அதே பகுதியில் வேறொரு உயர் சாதியினர் அதிகமாக வசித்து வருகிறார்கள். அவர்கள் ராஜாவை இங்கிருந்து காலி செய்து போகுமாறும், கொலை மிரட்டல் விடுத்து வந்தனராம்.

குடிசை வீட்டை சேதப்படுத்தியுள்ளனர்

இது தொடர்பாக பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரம்பலூர் தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தைக்கு ராஜா வந்திருந்தும், உயர் சாதியினர் வரவில்லை. இந்நிலையில் அவர்கள் ராஜாவின் குடிசை வீட்டை சேதப்படுத்தினார்களாம். இதனை தட்டி கேட்ட ராஜாவை, அவர்கள் சாதி பெயரை சொல்லி திட்டி, மற்றொரு பெண்ணை குச்சியால் அடித்து காயப்படுத்தினார்களாம். ஆனால் இது தொடர்பாகவும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. சாதி பெயரை சொல்லி திட்டியவர்கள் மீதும், குடிசை வீட்டை சேதப்படுத்தியவர்கள் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ராஜா தீக்குளிக்க முயன்றதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவரை ஜீப்பில் ஏற்றி சென்று அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story