மறைமலைநகர் அருகே வயதான தம்பதியை கட்டிப்போட்டு 17 பவுன் நகை கொள்ளை முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்


மறைமலைநகர் அருகே வயதான தம்பதியை கட்டிப்போட்டு 17 பவுன் நகை கொள்ளை முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்
x
தினத்தந்தி 16 March 2020 10:30 PM GMT (Updated: 16 March 2020 5:05 PM GMT)

மறைமலைநகர் அருகே வயதான தம்பதியை கட்டிப்போட்டு 17 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள சின்ன செங்குன்றம் அன்னை மூகாம்பிகை நகர் பகுதியை சேர்ந்தவர் கேளியப்பன் (வயது 70). இவர் தமிழக அரசு கருவூல அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி செல்வராணி (68). இவரது பேரன் ஆகிய 3 பேரும் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து முகமூடி, கைகளில் கையுறை அணிந்து, உடலில் மேலாடைகள் அணியாமல் திடீரென உள்ளே நுழைந்த 3 கொள்ளையர்கள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த வயதான தம்பதி மற்றும் அவர்களது பேரனை எழுப்பி கத்தியை காட்டி மிரட்டினர்.

பின்னர் கயிறு மூலம் 3 பேரையும் கட்டி போட்டுவிட்டு, வீட்டின் பூஜை அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 17 பவுன் நகை 2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துவிட்டு, முகமூடி கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் மறைமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் நடந்த சம்பவத்தை பற்றி கேளியப்பனிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் விசாரணை நடத்தினார்.

இதனையடுத்து காஞ்சீபுரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் காஞ்சீ புரத்தில் இருந்து மோப்ப நாய் கொண்டு வரப்பட் டது. மோப்பநாய் கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவங்கள் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது சம்பந்தமாக மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு முகமூடி கொள்ளையர்களை, தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story