தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தால் பிடிக்கப்பட்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பெற்றுத்தரக்கோரி ஊழியர்கள் மனு


தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தால் பிடிக்கப்பட்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பெற்றுத்தரக்கோரி ஊழியர்கள் மனு
x
தினத்தந்தி 16 March 2020 11:30 PM GMT (Updated: 16 March 2020 5:43 PM GMT)

தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தால் பிடிக்கப்பட்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பெற்றுத்தர வேண்டும் எனக்கூறி ஊழியர்கள் புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது விலையில்லா வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, வங்கி கடன், பசுமைவீடு, சாலைவசதி, குடிநீர்வசதி, முதியோர் உதவித்தொகை, திருநங்கைகளுக்கான வீட்டுமனைப் பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 435 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி

கூட்டத்தில் அறந்தாங்கி அருகே உள்ள குரும்பூர் தனியார் சர்க்கரை ஆலையில் பணியாற்றிய ஊழியர்கள் கொடுத்த மனுவில், இந்த சர்க்கரை ஆலையில் புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் பயிரிடப்படும் சர்க்கரை கரும்புகள், சர்க்கரை ஆலையில் டன் கணக்கில் கொண்டுவந்து விற்பனை செய்து வந்தனர். காலப்போக்கில் சர்க்கரை ஆலை முறையாக இயங்காததால் சர்க்கரை ஆலையை நிர்வாகம் இழுத்து மூடியது. இதனால் அங்கு பணிபுரிந்த 100-க்கும் மேற்பட்டோர் வேலை இல்லாமல் இருந்து வந்தனர்.

ஏற்கனவே சர்க்கரை ஆலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆலை நிர்வாகம் மாதம் ரூ.500 வீதம் பல ஆண்டுகளாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்) பிடித்தம் செய்தது. ஆனால் எங்களுக்கு இதுவரை அந்த தொகை வழங்கப்படவில்லை. தற்போது சர்க்கரை ஆலையை இழுத்து மூடி விட்டதால், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொகையை ஊழியர்கள் நிர்வாகத்திடம் கேட்டபோது உள்ளே அனுமதிக்காமலும், முறையான தகவல் சொல்லாமலும் இழுத்தடித்து வருகின்றனர். எனவே எங்களுக்கு சேர வேண்டிய வருங்கால வைப்பு நிதி தொகையை உடனடியாக சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் இருந்து பெற்றுத்தர வேண்டும் எனக்கூறியிருந்தனர்.

பட்டா வழங்க வேண்டும்

கந்தர்வகோட்டை தாலுகா துவார் ஆத்தங்கரை விடுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், ஆத்தங்கரை விடுதியில் உள்ள அனைத்து சமூகத்தையும் சேர்ந்த சுமார் 285 குடும்பங்கள், காடு புறம்போக்கில் தலைமுறை தலைமுறையாக வீடு கட்டி வசித்து வருகிறோம். எங்களுக்கு தனித்தனியாக பட்டா வழங்க வேண்டும் எனக்கூறி பலமுறை அரசு உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும், எங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. எனவே கலெக்டர் நாங்கள் வீடு கட்டி உள்ள காடு புறம்போக்கு இடத்தை பார்வையிட்டு, எங்களுக்கு தனித்தனியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தனர்.

வேகத்தடை அமைக்க வேண்டும்

புதுக்கோட்டை நகர தி.மு.க. செயலாளர் நைனா முகம்மது தலைமையில் தி.மு.க.வினர் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42-வது வார்டில் உள்ள அன்னசத்திரம், குசலாக்கடி ஆகிய பகுதிகளுக்கு நகராட்சி மூலம் வழங்கப்படுகின்ற குடிநீர் வினியோகம் சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு கிடைக்கவில்லை. இந்த பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக நகராட்சி நிர்வாகம் ஏற்கனவே நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தின்கீழ் சுமார் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி அமைத்தும் குடிநீர் கிடைக்கப்பெறவில்லை. எனவே இப்பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும் நியூ டைமண்ட் நகரில் இதுநாள் வரை தெருவிளக்குகள் நகராட்சி நிர்வாகத்தால் செய்து தரப்படவில்லை. தெருவிளக்குகள் அமைத்துத்தர வேண்டும் எனக்கூறியிருந்தனர்.

தி.மு.க.வினர் கொடுத்த மற்றொரு மனுவில், புதுக்கோட்டை நெடுஞ்சாலைத்துறையின் மூலமாக பராமரிக்கப்படுகின்ற புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி செல்லும் சாலை அசோக்நகர் பஸ் நிலையம் அருகிலும், புதுக்கோட்டையில் இருந்து திருக்கோகர்ணம் வழியாக திருச்சி செல்லும் சாலையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் அருகில் உள்ள பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் விபத்துகளை தடுக்க 2 இடங்களிலும் வேகத்தடை அமைத்து கொடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தனர்.

குடிநீர்

தி.மு.க.வினர் கொடுத்த மற்றொரு மனுவில், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் 1990-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் ரூ.40 கோடி செலவில் கொண்டு வரப்பட்ட திட்டம். இது நகர மக்களுக்கு பெரிதும் பயன் விளைவித்தது. நகரில் பெருகி வரும் மக்கள் தொகை அடிப்படையில் நகராட்சி நிர்வாகம், நகராட்சி சட்டம் தனிநபருக்கு சுமார் 100 லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். ஆனால் நகராட்சி நிர்வாகம் நாள் ஒன்றுக்கு 5 குடம்தான் வழங்குகிறது. மக்கள் தொகை அடிப்படையில் ஒன்றை கோடி லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டிய இடத்தில் நாள் ஒன்றுக்கு 60 லட்சம் லிட்டர்தான் தினந்தோறும் குடிநீர் வினியோகம் வழங்கப்படுகிறது.

புதுக்கோட்டை நகரில் வாக்காளர்களே சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். நகரில் வசிக்கும் மக்கள் தொகை 2 லட்சத்தை தாண்டுகிறது. தனியார் மூலம் ஒரு குடம் தண்ணீர் ரூ.7- க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தனர்.

Next Story