கொரோனாவால் ஏற்றுமதி பாதிப்பு: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து அதிகரிப்பு விலை தொடர்ந்து வீழ்ச்சி


கொரோனாவால் ஏற்றுமதி பாதிப்பு:   கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து அதிகரிப்பு   விலை தொடர்ந்து வீழ்ச்சி
x
தினத்தந்தி 17 March 2020 4:00 AM IST (Updated: 16 March 2020 11:15 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பால் அண்டை மாநிலங்களுக்கு காய்கறி ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்து உள்ளதால், காய்கறிகள் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.

சென்னை, 

உலக பொருளாதாரத்தில் மட்டுமின்றி காய்கறி விலைகளிலும் கொரோனா பாதிப்பு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கு காய்கறி ஏற்றுமதி தடைப்பட்டு உள்ளது.

இதனால் அந்த மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய காய்கறிகள் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு எடுத்து வரப்படுகின்றன. எனவே வரத்து அதிகரிப்பால் காய்கறிகள் விலை தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

இதுதொடர்பாக சென்னை கோயம்பேடு சிறு மொத்த காய்கறிகள் வியாபாரிகள் நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.எஸ்.முத்துக்குமார் கூறியதாவது:-

விற்பனை அதிகரிப்பு

வழக்கமாக இந்த காலக்கட்டத்தில் காய்கறிகள் விலை உச்சத்தில் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பால், காய்கறிகள் விலை சரிவை சந்தித்து உள்ளது.

காய்கறிகள் வரத்து அதிகரித்தாலும் அவை தேக்கம் அடைவது இல்லை. ஏனென்றால் தற்போது இறைச்சி உணவை தவிர்த்து பெரும்பாலானோர் காய்கறி உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதால், அவற்றின் விற்பனை அதிகரித்து உள்ளது.

பாகற்காய் விலை அதிரடி குறைவு

கோயம்பேடு மார்க்கெட்டில் (நேற்றைய நிலவரம்) தக்காளி ஒரு கிலோ ரூ.8 முதல் ரூ.10, பெரிய வெங்காயம் ரூ.24, சாம்பர் வெங்காயம் ரூ.40 முதல் ரூ.45, கத்திரிக்காய் ரூ.10, பீட்ரூட்- ரூ.7, கேரட் ரூ.20 முதல் ரூ.25, பாகற்காய்(பெரியது) ரூ.15, (சிறியது) ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.20 முதல் ரூ.22, முருங்கைக்காய் ரூ.25 முதல் ரூ.30, தேங்காய்(ஒன்று) ரூ.20, வாழைக்காய்(ஒன்று) ரூ.7, புதினா, மல்லி(ஒரு கட்டு) ரூ.3 ஆகிய விலைகளில் காய்கறிகள் விற்பனை ஆகிறது.

இதில் பாகற்காய், தேங்காய் விலை கடந்த வாரத்தை விட பாதியாக குறைந்துள்ளது. காய்கறி விலையில் இன்னும் 10 நாட்கள் இதே நிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story