கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை : கோவையில் வணிக வளாகங்கள் மூடப்பட்டன


கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை : கோவையில் வணிக வளாகங்கள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 17 March 2020 3:45 AM IST (Updated: 16 March 2020 11:22 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவையில் வணிக வளாகங்கள் மூடப்பட்டன.

கோவை,

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இது, இந்தியாவில் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து உள்ளது.

எனவே கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அதிகாரிகள் முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இது தொடர்பாக தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் அதிகாரிகள் முகாமிட்டு கோவைக்குள் வரும் அனைத்து வாகனங்களிலும் கிருமி நாசினி தெளித்து வருகிறார்கள்.

கோவை உக்கடத்தில் இருந்து கேரளா செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் மாநகர பகுதியில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.

கோவை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள எல்லையோர பகுதிகளான பொள்ளாச்சி, கிணத்துக்கடவில் இருக்கும் 10 தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. அதுபோன்று எல்லைப்பகுதியில் உள்ள கோவில்களை சுத்தமாக வைக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

கோவை குற்றாலம் அருவி, காரமடை அருகே வனப்பகுதியில் இருக்கும் பரளிக்காடு சுற்றுலா மையம் மூடப்பட்டு உள்ளது. எப்போதுமே பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் கோவை வ.உ.சி. உயிரியியல் பூங்கா நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. அதன் அருகில் இருக்கும் சிறுவர் பூங்கா, தாவரவியல் பூங்காவுக்கும் யாருமே செல்லவில்லை.

கொரோனா வைரஸ் பீதி காரணமாக கோவை புரூக் பாண்ட் சாலை, சத்தி சாலையில் உள்ள வணிக வளாகங்கள் மூடப்பட்டன. அங்கு அதற்கான அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது. அவினாசி சாலையில் உள்ள வணிக வளாகம் காலையில் திறந்து இருந்தது. மாலையில் அந்த வணிக வளாகமும் மூடப்பட்டது.கோவை மாநகரில் 40-க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் உள்ளன. இதில் வணிக வளாகங்களில் இருக்கும் தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன. மற்ற பகுதிகளில் உள்ள தியேட்டர்கள் நேற்று செயல்பட்டன. அதில் கூட்டம் குறைவாகவே இருந்தது.ஆனால் நேற்று கோவை புறநகர் மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்து க்கடவு ,ஆனைமலை பகுதிகளில் சினிமா தியட்டர்கள் மூடப்பட்டன.

கோவை மாவட்டத்தில் உள்ள 1,697 அங்கன்வாடி மையங்கள், 1,094 தொடக்கப் பள்ளிகள் நேற்று மூடப்பட்டு இருந்தன. இதனால் அந்த பள்ளி மாணவ-மாணவிகள் வீட்டில் மகிழ்ச்சியுடன் விளையாடினார்கள்.

பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணிந்தபடி சென்றனர். 

இது குறித்து கோவையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வெளியிடங்களுக்கு செல்வதை பொதுமக்களே தவிர்த்து வருகிறார்கள். கோவை மாவட்டத்தில் அனைத்து தியேட்டர்களையும் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி நாளை (இன்று) முதல் தியேட்டர்கள் செயல்படாது. அதுபோல் வணிக வளாகங்களும் மூடப்பட்டு இருக்கும். கோவை மாநகராட்சி சார்பில் 10 ஆயிரம் விழிப்புணர்வு நோட்டீஸ் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது என்றார்.

கோவை மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன் குமார் ஜடாவத் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து பூங்காக்கள், மாநகராட்சிக்கு சொந்தமான உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவை நாளை (இன்று) முதல் வருகிற 31-ந் தேதி வரை செயல்படாது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story