மாவட்ட செய்திகள்

பா.ஜனதா, இந்து அமைப்புகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பேரணி + "||" + P.Janatha, on behalf of Hindu organizations Rally in support of Citizenship Amendment Act

பா.ஜனதா, இந்து அமைப்புகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பேரணி

பா.ஜனதா, இந்து அமைப்புகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பேரணி
பா.ஜனதா, இந்து அமைப்புகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக ஊட்டியில் பேரணி நடந்தது.
ஊட்டி,

நீலகிரி மாவட்ட பா.ஜனதா கட்சி மற்றும் அனைத்து இந்து அமைப்புகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக ஊட்டியில் நேற்று பேரணி நடந்தது. இதனை பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிரு‌‌ஷ்ணன் தொடங்கி வைத்தார். இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் குமார், ஆர்.எஸ்.எஸ். கோவை மண்டல துணைத் தலைவர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரணியானது பிரிக்ஸ் பள்ளி அருகே இருந்து தொடங்கி கே‌ஷினோ சந்திப்பு, கமர்சியல் சாலை, மணிக்கூண்டு வழியாக ஏ.டி.சி. வரை நடைபெற்றது. இதில் பெண்கள், ஆண்கள் கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏந்தி சென்றனர். மேலும் நான் இந்தியன் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிக்கிறேன், குடியுரிமை திருத்த சட்டம்(சி.ஏ.ஏ.), தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்.பி.ஆர்.), தேசிய குடியுரிமை பதிவேடு(என்.ஆர்.சி.) ஆகிய சட்டங்களை ஆதரிப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றார்கள். முன்னதாக பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிரு‌‌ஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

தமிழகத்தில் தி.மு.க. முஸ்லிம் மக்களை தூண்டி விட்டு அமைதியை சீர்குலைக்கும் சூழ்ச்சியை உருவாக்கி வருகிறது. இது மிகவும் துரதி‌‌ஷ்டமானது. குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவில் வாழும் எந்த மதத்தை சார்ந்தவர்களுக்கும் எதிரானது அல்ல. நாட்டின் பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் சீக்கியர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய சிறுபான்மையினர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக இருக்கிறது.

இதை தெரிந்துகொண்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் புரிந்துகொள்ளாததை போல் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களிடம் குடியுரிமை திருத்த சட்டத்தால் பாதிப்பு என்று கூறுகின்றனர். அதே போல காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளும் செய்து வருகின்றன. படித்த முஸ்லிம்கள் தேச பக்தி உணர்வுடன் சட்டத்தை அறிந்துகொண்டு மதவாதிகள் சொல்வதை கேட்பது இல்லை. தமிழக அரசு இந்த சட்டம் தொடர்பாக புள்ளி விவரங்கள் இல்லாமல் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. புள்ளி விவரங்கள் உண்மையாக இருக்க வேண்டும். கேட்க வேண்டிய விவரங்கள் ரகசியமானது.

தி.மு.க.வுக்கு பயந்து அ.தி.மு.க. அரசு மத்திய அரசிடம் சில விளக்கம் கேட்டு உள்ளது. அந்நிய நாடுகளில் இருந்து இந்தியாவில் ஊடுருவியர்களை கண்டறிந்து வெளியேற்ற வேண்டும். தமிழ்நாடு மாநில பா.ஜனதா தலைவராக பட்டியல் இனத்தை சேர்ந்த முருகன் நியமிக்கப்பட்டதால், பெரியார் கொள்கைகளை கொண்ட கட்சிகள் பா.ஜனதா நடவடிக்கையை ஒன்றும் சொல்ல முடியாத படி உள்ளனர். அவர் சட்டம் படித்தவர், தனக்கு அளிக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்தவர். அவரை மாநில தலைவராக கட்சியினர், தொண்டர்கள் ஏற்றுக்கொண்டு இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் இந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் மஞ்சுநாத் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பேரணியையொட்டி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வெளிமாவட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஊட்டியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. நகராட்சி மார்க்கெட், கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ், மெயின் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் 800 கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.