சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு


சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 16 March 2020 11:00 PM GMT (Updated: 16 March 2020 7:04 PM GMT)

சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் இளநீர், தர்பூசணி விற்பனை மும்முரம் அடைந்துள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்கள் கோடை காலம் ஆகும். இந்த காலக்கட்டத்தில் வெயில் 100 டிகிரிக்கு மேல் கொளுத்தும்.

கோடை காலம் நெருங்குவதால் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக சென்னை, திருச்சி, கரூர், மதுரை, சேலம், கோவை, தர்மபுரி போன்ற மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது.

சென்னையில் அதிகாலை வேளையில் குளிர்ந்த சீதோ‌‌ஷ்ண நிலை நிலவுகிறது. சூரியன் உதயமானதுடன் வெயில் வேலையை காட்டுகிறது. மதிய வேளையில் வெயில் சுளீர் என்று அடிக்கிறது.

வெயிலின் பிடியில் இருந்து தப்பிக்க இளம்பெண்கள் முகத்தை துப்பட்டாவால் மூடியபடியும், குடை பிடித்தபடியும் செல்வதை காண முடிகிறது.

குளிர்ச்சியூட்டும் பானங்கள்

வெயிலின் தாக்குதலில் இருந்து இளைப்பாறுவதற்காக, உடலுக்கு குளிர்ச்சியூட்டும் பானங்கள் விற்பனை செய்யும் கடைகளை பொதுமக்கள் நாட தொடங்கி உள்ளனர். எனவே சாலைகளில் ஆங்காங்கே புற்றீசல் போன்று பழச்சாறு, கரும்பு ஜூஸ், தர்பூசணி விற்பனை கடைகள் முளைத்து வருகின்றன. மோர், கம்பங் கூழ், கேழ்வரகு கூழ் போன்றவையும் தள்ளுவண்டிகளில் ஆங்காங்கே விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த கடைகளில் மதிய வேளைகளில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுவதை காண முடிகிறது.

இளநீர் விற்பனை

உடல் சூட்டை தணிக்கும் இயற்கை பானமான இளநீர் விற்பனையும் மும்முரம் அடைந்து உள்ளது. தேவை அதிகரிப்பால் இளநீர் விலை கணிசமாக உயர்ந்து இருக்கிறது. உடலுக்கு நீர்ச்சத்தை அளிக்கும் பழங்களுக்கும் தற்போது கிராக்கி ஏற்பட்டு உள்ளது.

பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் குளிர்பானங்கள், ஐஸ்கிரீம்கள் விற்பனையும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

Next Story