காதலியுடன் சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் நிலையம் முன்பு வாலிபர் தர்ணா கரூர் அருகே பரபரப்பு


காதலியுடன் சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் நிலையம் முன்பு வாலிபர் தர்ணா கரூர் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 17 March 2020 5:00 AM IST (Updated: 17 March 2020 12:42 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகே காதலியுடன் சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் நிலையம் முன்பு வாலிபர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

க.பரமத்தி,

திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் ரகுபதி (வயது 28). இவர் தனியார் பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இதேபோல் கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியை சேர்ந்த 28 வயது பெண் முசிறியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர் முசிறியில் வீடு எடுத்து தங்கி பணிக்கு சென்று வந்தார். இந்தநிலையில் பஸ்சில் சென்று வந்தபோது ரகுபதிக்கும், அந்த பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. அவர்கள் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த காதல் விவகாரம் அந்த பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்தது. ஆனால் அவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால், பெண்ணின் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் கடந்த 13-ந்தேதி பெண்ணின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி, பெண்ணின் உறவினர் அவரை ஊருக்கு அழைத்து சென்று விட்டார்.

தர்ணா

பின்னர் அது பொய் என்று தெரிந்ததும், அந்த பெண் அங்கிருந்து தப்பித்து வந்து, ரகுபதியுடன் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள புன்னம் சத்திரத்திற்கு சென்றார். இதுகுறித்து அறிந்ததும் அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் புன்னம்சத்திரத்திற்கு சென்று அங்கிருந்த காதல் ஜோடியை மிரட்டினர். அப்போது ரகுபதியை விரட்டி விட்டு, அப்பெண்ணை தங்களுடன் அழைத்து சென்று விட்டனர். இதையடுத்து நேற்று ரகுபதி காதலியை மீட்டு தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி, தனது உறவினர்களான கணபதி (27), திவாகர் (24) ஆகியோருடன் க.பரமத்தி போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் கொடுத்தார்.

அதன்பேரில், போலீசார் அப்பெண்ணின் பெற்றோரை அழைத்து விசாரணை நடத்துவதாக கூறியுள்ளனர். ஆனால் ரகுபதி உடனடியாக காதலியை மீட்டு தரவேண்டும் எனக்கூறி, உறவினர்களுடன் போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், தர்மலிங்கம், சதீஸ்குமார் உள்பட போலீசார் ரகுபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் உடன்பாடு ஏற்படவில்லை. மேலும் தொடர்ந்து ரகுபதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் ரகுபதி உள்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் போலீஸ் நிலைய பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story