கொரோனா வைரஸ் எதிரொலி: கலெக்டர் அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிப்பு


கொரோனா வைரஸ் எதிரொலி: கலெக்டர் அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிப்பு
x
தினத்தந்தி 17 March 2020 4:00 AM IST (Updated: 17 March 2020 1:17 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் எதிரொலியாக கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பொதுமக்களும் கைகளை சுத்தம் செய்த பிறகே மனுக்கள் கொடுக்க அனுமதிக்கப்பட்டனர்.

கடலூர்,

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி கடலூர் மாவட்டத்தில் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கைகளை அனைவரும் சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்பது போன்ற பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அனைத்துத்துறை அலுவலகங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் கலந்து கொண்டு மனுக்கள் கொடுப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வருகை தந்தனர். அவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் ஸ்பிரே தெளித்து கைகளை சுத்தம் செய்ய வைத்தார். மனுக்கள் கொடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்த அனைவருக்கும் இந்த ஸ்பிரே கைகளில் தெளிக்கப்பட்டது. முன்னதாக கலெக்டர் அன்புசெல்வனும் கிருமி நாசினி மூலம் தனது கையை சுத்தப்படுத்தினார். அதன்பிறகு பொதுமக்களிடம் கலெக்டர் மனுக்களை பெற்றார்.

Next Story