கடலூர் துறைமுகத்துக்கு திருக்கை மீன்கள் வரத்து அதிகரிப்பு - போட்டி போட்டு வியாபாரிகள் வாங்கிச்சென்றனர்
கடலூர் துறைமுகத்துக்கு திருக்கை மீன்கள் வரத்து நேற்று அதிகரித்து காணப்பட்டது. இதனை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச்சென்றனர்.
கடலூர் முதுநகர்,
கடலூர் அருகே உள்ள சிங்காரத்தோப்பு, சோனாங்குப்பம், தேவனாம்பட்டினம், அக்கரைக்கோரி உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் தினசரி கடலூர் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். அந்த வகையில் கடலூர் துறைமுகத்தில் இருந்து நேற்று அதிகாலையில் பைபர் மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். பின்னர் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டு காலை 11 மணி அளவில் துறைமுகத்துக்கு திரும்பினர்.
இதில் மீனவர்களின் வலைகளில் அதிக அளவில் திருக்கை மீன்கள் சிக்கியிருந்தன. இதில் ஒரு திருக்கை மீன் மட்டும் சுமார் 300 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இந்த வகையான திருக்கை மீன்கள் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதுபோல் சூரை மீன்களும் அதிகளவில் மீனவர்களின் வலைகளில் சிக்கியிருந்தன. அதாவது சுமார் 25 டன் சூரை மீன்களை மீனவர்கள் கொண்டு வந்திருந்தனர்.
இந்த மீன்களை கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும், விழுப்புரம், திருச்சி, சேலம் உள்ளிட்ட வெளிமாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதில் ஒரு கிலோ திருக்கை மீன் ரூ.130 முதல் ரூ.140 வரைக்கும், ஒரு கிலோ சூறை மீன்கள் ரூ.140-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதிகளவில் மீன்கள் பிடிபட்டதாலும், அவை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாலும் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story