கள்ளக்குறிச்சியில் குறைகேட்பு கூட்டம் உதவித்தொகை கேட்டு கலெக்டரிடம் மாற்றுத்திறனாளிகள் மனு


கள்ளக்குறிச்சியில் குறைகேட்பு கூட்டம் உதவித்தொகை கேட்டு கலெக்டரிடம் மாற்றுத்திறனாளிகள் மனு
x
தினத்தந்தி 17 March 2020 3:45 AM IST (Updated: 17 March 2020 1:17 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் கலெக்டர் கிரண்குராலா தலைமையில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் உதவித்தொகை கேட்டு மாற்றுத்திறனாளிகள் மனு கொடுத்தனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. அதன்படி நேற்று கலெக்டர் கிரண்குராலா தலைமையில் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, அரசின் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் கொடுத்தனர்.

முன்னதாக மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருந்த இடத்துக்கு கலெக்டர் கிரண்குராலா நேரில் சென்று மனுக்கள் வாங்கினார். உதவித்தொகை கேட்டு அவரிடம் மாற்றுத்திறனாளிகள் மனு கொடுத்தனர். அந்த மனுக்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் என மொத்தம் 470 மனுக்களையும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் கிரண் குராலா உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சரவணன், மாவட்ட பழங்குடியினர் நலத்திட்ட அலுவலர் பிரகா‌‌ஷ்வேல், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கே.ஜெகநாதன் உள்பட வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை என அனைத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story