திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகள் மூட உத்தரவு: ‘கொரோனா வைரஸ் குறித்து யாரும் பீதியடைய வேண்டாம்’ மாவட்ட கலெக்டர் தகவல்


திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகள் மூட உத்தரவு:   ‘கொரோனா வைரஸ் குறித்து யாரும் பீதியடைய வேண்டாம்’   மாவட்ட கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 17 March 2020 4:30 AM IST (Updated: 17 March 2020 1:28 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்து தடுப்பு நடவடிக்கையாக திரையரங்குகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே கோரோனா வைரஸ் குறித்து யாரும் பீதியடைய வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர், 

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நேற்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை மற்றும் திருவள்ளூர் நகராட்சி சார்பில், கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கை கழுவும் முறை குறித்து செயல்முறை விளக்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கும் விதமாக திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்கு அவர் வருகை தந்து ஆய்வு செய்தார்.

பின்னர், அங்கு ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து விளக்கமாக எடுத்துக் கூறிய அவர், கை கழுவும் முறைகள் குறித்து விளக்கிக் கூறினார்.

மேலும் ரெயில் நிலையத்தில் கிருமிநாசினிகள் தெளிப்பதை பார்வையிட்ட கலெக்டர் அங்கு வந்த ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அதை தொடர்ந்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திரையரங்குகள் மூட உத்தரவு

மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளாக மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், கோவில் வளாகங்கள், அரசு அலுவலகங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினிகள் தெளிக்கும் பணிகள் தீவிரமாக போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. எனவே ‘கொரோனா வைரஸ் குறித்து யாரும் பீதியடைய வேண்டாம்’.

முதல்-அமைச்சரின் சுற்றறிக்கையின்படி, எல்லையோர மாவட்டங்களில் திரையரங்குகள், வணிக வளாகங்கள், உள்ளிட்டவைகள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக ஆந்திர எல்லை பகுதிகளில் 5 வட்டங்களில் 12 திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது.

மருத்துவ முகாம்கள்

மேலும் கொரோனா நோய்த்தொற்று திருவள்ளூர் மாவட்ட எல்லைப் பகுதிகளான பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருவாலங்காடு, எல்லாபுரம், பூண்டி, கும்மிடிப்பூண்டி, முதலிய வட்டாரங்களில் மாநில எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்காணிக்க மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த முகாம்களில் 1,501 பேர் பரிசோதிக்கப்பட்டு உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்புக்குள்ளனவர்கள் யாருமில்லை. மேலும் பொதுமக்கள் அனைவரும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும், பொதுமக்கள் கைகளை சோப்பு உள்ளிட்ட கிருமிநாசினிகள் மூலமாக நன்கு சுத்தம் செய்ய வேண்டும்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர்கள் ஜவகர்லால், பிரபாகரன், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம், திருவள்ளூர் தாசில்தார் விஜயகுமாரி, சுகாதார அலுவலர் செல்வராஜ், சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ், வெயில் முத்து, சுதாகர் உட்பட திரளான அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Next Story