தேனி அருகே பரபரப்பு: திருமணமான 4-வது நாளில் புதுப்பெண் தற்கொலை
தேனி அருகே திருமணமான 4-வது நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தேனி,
மதுரை அரசரடியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 37). இவருக்கும், தேனியை அடுத்துள்ள ஆதிப்பட்டியை சேர்ந்த தவச்செல்வி (31) என்பவருக்கும் கடந்த 12-ந் தேதி திருமணம் நடந்தது. தவச்செல்வி, தேனியில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு (தாய்கோ) வங்கியில் காசாளராக வேலை பார்த்து வந்தார்.
திருமணத்தை தொடர்ந்து மணிகண்டன், தவச்செல்வி ஆகியோர் ஆதிப்பட்டியில் வசித்து வந்தனர். திருமணமான 4-வது நாளான நேற்று முன்தினம், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தவச்செல்வி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அந்த நேரத்தில், வீட்டுக்கு மணிகண்டன் வந்தார்.
அப்போது அவர், தனது மனைவி தற்கொலைக்கு முயல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
பின்னர் தவச்செல்வி மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் ஒரு புகார் மனு அளித்தார்.
அந்த புகார் மனுவில், வங்கியில் வேலைப்பளு அதிகம் இருப்பதாக தனது மனைவி கூறி வந்ததாகவும், அதற்கு தான் ஆறுதல் கூறி வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அந்த புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் யாழிசைசெல்வன் வழக்குப்பதிவு செய்துள்ளார். திருமணமாகி 4 நாட்களே ஆவதால், தவச்செல்வி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பெரியகுளம் சப்-கலெக்டர் சினேகா விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் தேனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story