டாஸ்மாக் மதுக்கடை திறப்பதை எதிர்த்து கிராம மக்கள் மனு


டாஸ்மாக் மதுக்கடை திறப்பதை எதிர்த்து கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 16 March 2020 9:45 PM GMT (Updated: 16 March 2020 8:47 PM GMT)

டாஸ்மாக் மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கந்தசாமி, திட்ட இயக்குனர் கவிதா உள்பட அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் அடிப்படை வசதிகள், உதவித்தொகை கேட்டு மனு கொடுத்தனர்.

இதில் நிலக்கோட்டை தாலுகா சிலுக்குவார்பட்டி, பழைய சிலுக்குவார்பட்டி, இ.கோவில்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள், டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், சிலுக்குவார்பட்டி-மதுரை சாலையில் இருந்த டாஸ்மாக் மதுக்கடையை பல்வேறு போராட்டங்கள் நடத்தி வேறு இடத்துக்கு மாற்றினோம். இந்த நிலையில் மீண்டும் அங்கு மதுக்கடை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் பெண்கள், பள்ளி மாணவிகளுக்கு மீண்டும் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படும். மேலும் சமூக விரோத செயல்கள், விபத்துகள் நடக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே, மதுக்கடை திறக்காமல் மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும், என்றனர்.

அதேபோல் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தனியாக குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி சங்க தலைவர் ராஜூ தலைமையிலான முன்னாள் ராணுவவீரர்கள் மனு கொடுத்தனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், முன்னாள் படைவீரர்களுக்கு தனியாக குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும். ஆனால், கடந்த 6 மாதங்களாக கூட்டம் நடத்தப்படவில்லை. மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்கும்படி கூறுகின்றனர். இதனால் முன்னாள் படைவீரர்களின் கோரிக்கைகள் நிறைவேறுவதில் தாமதம் ஆகிறது. எனவே, நாட்டுக்காக உழைத்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மீண்டும் தனியாக குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும், என்றனர்.

சீர்மரபினர் நலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில், திண்டுக்கல் மாவட்டத்தில் டி.என்.டி. சாதி சான்று கேட்டு விண்ணப்பித்த பலருக்கு இதுவரை வழங்கப்படவில்லை. அதேபோல் சீர்மரபினர் நலவாரிய அட்டை வழங்கப்படாததால், நலத்திட்ட உதவிகளை பெற முடியவில்லை. எனவே, சாதி சான்று மற்றும் நலவாரிய அட்டை வழங்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

மேலும் ஒட்டன்சத்திரம் நகராட்சி 17-வது வார்டு சண்முகவேல்புரம் பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் வார்டுக்கு அருகில் உள்ள பழனிகவுண்டன்புதூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக புறவழிச்சாலை அமைப்பதற்காக பள்ளிக்கூடத்தை இடித்தனர். அதன்பின்னர் இதுவரை பள்ளிக்கூடம் கட்டவில்லை. இதனால் தூரத்தில் உள்ள பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப வேண்டியது உள்ளது. எனவே, எங்கள் பகுதிக்கு அருகில் உள்ள அரசு நிலத்தில் மீண்டும் பள்ளிக்கூடம் கட்ட வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

ஆதித்தமிழர் பேரவையின் கிழக்கு மாவட்ட தலைவர் காளிராஜ் கொடுத்த மனுவில், திண்டுக்கல் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் 281 பேரை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் பணிக்காலத்தில் இறந்த நிரந்தர துப்புரவு பணியாளர்களின் வாரிசுகளுக்கு உடனடியாக அரசு வேலை வழங்க வேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது.

Next Story