கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: பழனி கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பரிசோதனை
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ‘தெர்மா மீட்டர்’ மூலம் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன்பிறகே அவர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
பழனி,
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் முன்எச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது. குறிப்பாக வழிபாட்டு தலம், வணிக வளாகம், பஸ், ரெயில்நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் கொரோனா வைரஸ் குறித்தும், சுற்றுப்புற தூய்மை, கை கழுவுவதன் அவசியம் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஆன்மிக தலமான பழனி முருகன் கோவிலில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக காய்ச்சல், இருமல் இருப்பின் பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் எதிரொலியாக பழனிக்கு வெளிமாநில பக்தர்கள் வருகை முற்றிலும் குறைந்து காணப்படுகிறது. எனவே உள்ளூர் மக்கள் மட்டும் கோவிலுக்கு வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் காய்ச்சல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதற்காக கோவிலில் நுழையும் பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ‘தெர்மா மீட்டர்’ மூலம் பக்தர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தெர்மாமீட்டரை பக்தர்களின் நெற்றி பகுதியில் வைத்தால், அது அவரது உடலின் வெப்பநிலையை காட்டும். கடும் காய்ச்சல் இருந்தால் வெப்பநிலை அதிகமாக இருக்கும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அவருக்கு சுகாதாரத்துறையினர் உரிய ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். மேலும் சோதனை முடிந்தவுடன் பக்தர்களுக்கு கிருமி நாசினி கொடுத்து கைகளை சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
இதுகுறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில் ரோப்கார், பாதவிநாயகர் கோவில், மின்இழுவை ரெயில்நிலையம் ஆகிய இடங்களில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. கோவில் சார்பில் கூடுதலாக ‘தெர்மா மீட்டர்’ வாங்கப்பட்டு சோதனை செய்யப்படவுள்ளது என்றார்.
இந்நிலையில் நேற்று காலையில் பழனி கோவிலில் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு, விழிப்புணர்வு குறித்த ஆலோசனை கூட்டம் தண்டபாணி நிலையத்தில் நடந்தது. இதில் பழனி சப்-கலெக்டர் உமா, கோவில் செயல்அலுவலர் ஜெயசந்திரபானு ரெட்டி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story