6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிர்பலி: கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கான ஐரோப்பிய குழுவில் கர்நாடக விஞ்ஞானி உலகத்துக்கே சேவை செய்கிறான் என தாய் பெருமிதம்
6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிர்பலி வாங்கிய கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஐரோப்பிய குழுவில் கர்நாடக விஞ்ஞானி இடம் பிடித்துள்ளார்.
பெங்களூரு,
கொரோனா வைரஸ். பெயரை கேட்டவுடனேயே சும்மா அதிருதில்லா.... என்பது போல் இந்த நோய் தொற்று உலகம் முழுவதும் சுமார் 93 நாடுகளில் பரவி உயிர் பலி வாங்கிவிட்டது. சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காவு வாங்கிய கொரோனா வைரஸ் தாக்கி கர்நாடக மாநிலம் கலபுரகியை சேர்ந்த 76 வயது முதியவர் மரணமடைந்தார். இந்தியாவில் இந்த நோய் தாக்குதலுக்கு பலியான முதலாமவர் இந்த முதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகத்தில் இதுவரை 6 பேருக்கு இந்த நோய் பாதிப்பு உள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் இந்நோய் அறிகுறியால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 110-க்கும் மேற்பட்டோரை கொேரானா வைரஸ் பாதித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரசின் தாக்கத்தால் கேரளா, மராட்டியம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் கர்நாடக விஞ்ஞானி
இவ்வாறு உலகம் முழுவதும் மக்களை பீதி அடைய செய்துள்ள கொரோனா வைரசை தடுக்க ஐரோப்பிய நாடுகள் ஒரு விஞ்ஞானி குழுவை அமைத்துள்ளது. இந்த குழு கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளது.
இந்த குழுவில் கர்நாடகத்தை சேர்ந்த ஒரு விஞ்ஞானி இடம் பிடித்துள்ளார் என்பது பெருமையான, பாராட்டுக்குரிய விஷயம். இதுபற்றிய விவரம் பின் வருமாறு:-
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடுவை சேர்ந்தவர் மகாதேஷ் பிரசாத். இவர் ஜெர்மனியில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார். தற்போது இவர் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டறியும் ஐரோப்பிய பணிக்குழுவில் உறுப்பினராக இடம் பெற்றுள்ளார்.
தற்போது இவரது குடும்பத்தினர் மைசூருவில் வசித்து வருகிறார்கள். விஞ்ஞானி மகாதேஷ் பிரசாத், மைசூர் பல்கலைக்கழக வரலாற்றில் உயிர் வேதியியலில் பி.எச்.டி பெற்ற முதல் ஜூனியர் ஆவார். இவர் இளம் வயதிலேயே தொடர்ச்சியாக 5 தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளார்.
விருதுகள்
மகாதேஷ் பிரசாத் 2019-ல் பெல்ஜியத்தில் விசிட்டிங் வைராலஜி நட்புறவு விருது, 2016-ம் ஆண்டில் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தின் இளம் விஞ்ஞானி விருது, 2012-ல் சுவீடனில் போஸ்ட் டாக்டோரல் நட்புறவு விருது, 2010-ல் அமெரிக்காவின் என்.ஐ.எச். போஸ்ட் டாக்டோரல் நட்புறவு விருது, 2009-ல் டி.ஏ.ஏ.டி. விருதையும் பெற்றுள்ளார்.
மேலும், உயிர் வேதியியல், வைராலஜி, ஸ்டெம் செல் உயிரியல், கட்டி வைராலஜி, புற்றுநோய் மரபியல், சிஸ்டம் தடுப்பூசி மற்றும் பலவற்றில் சர்வதேச அளவில் 16 கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.
மக்களை காப்பாற்றுவார்
இதுகுறித்து மகாதேஷ் பிரசாத்தின் தாய் ரத்னம்மா நிருபர்களிடம் கூறியதாவது:-
எனது மகன் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டறிதல் குழுவில் இடம்பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடு தான் எங்கள் சொந்த ஊர். அரசு பள்ளியில் தான் எனது மகன் பள்ளி படிப்பை முடித்தான். பின்னர் ஹாசன் அரசு கல்லூரியில் பி.எஸ்.சி.யும், மைசூரு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி.யும், பி.எச்.டி.யும் முடித்தான். தற்போது ஐரோப்பிய நாடா பெல்ஜியத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறான். கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டறிதல் குழுவில் நானும் இடம்பெற்றிருப்பதாக எனது மகன் கூறினான். அதை கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறேன்.
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் சிறப்பாக செயல்படுமாறு எனது மகனிடம் கூறினேன். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அவன் இந்தியா வந்திருந்தான். எனது மகன் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் குழுவில் இருப்பதால் நான் பயப்படவில்லை. இந்த நோய் பாதிப்பால் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த நோய்க்கு எனது மகன் மருந்து கண்டுபிடிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிந்து உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான மக்களை காப்பாற்றுவார்.
நாட்டுக்கு சேவை செய்ய கற்றுக்கொடுத்தோம்
பி.எச்.டி. முடித்த பின்னர் மகாதேஷ் ஜெர்மனியில் பல ஆண்டுகளாக விஞ்ஞானியாக பணியாற்றினார். பின்னர் சுவீடனில் விஞ்ஞானியாக பணியாற்றினார். தற்போது பெல்ஜியத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். எனது மகன் தினமும் 2 முறை என்னுடன் போனில் பேசி வருகிறார். கொரோனாவுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்க நாங்கள் மிகவும் கடினமாக உழைக்கிறோம் என்று என்னிடம் கூறினார். நிச்சயம் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை அவர் கண்டுபிடிப்பார்.
எனது மகன் ஆரோக்கியமாக இருக்கிறான். அவருடைய மனைவியும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். எனக்கு எந்த கவலையும் இல்லை. எனது மகன் நாட்டிற்கு அல்ல, உலகத்துக்ேக சேவை செய்கிறான். இதைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எங்களுக்கு நிச்சயமாக சுயநலம் இல்லை. சிறு வயதிலிருந்தே, நாங்கள் எங்களது இரு மகன்களுக்கும் நாட்டுக்கு சேவை செய்ய கற்றுக் கொடுத்தோம். எனது மகன்கள் விஞ்ஞானிகளாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். தற்போது எனது இரண்டு மகன்களும் விஞ்ஞானிகள். எனது இளைய மகன் ஐரோப்பாவின் பின்லாந்தில் விஞ்ஞானியாக வேலை செய்கிறான்.
இந்த ஆராய்ச்சியை தொடர்ந்து செய்ய என் மகனிடம் கூறி வருகிறேன். "உலகத்தை அச்சுறுத்தும் கொரோனா வைரசின் தொற்றுநோய்க்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்து அதை ஒழிக்கும்படி என் மகனிடம் கூறியுள்ளேன்".
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story