கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 110 அடியாக குறைந்தது தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த அதிகாரிகள் அறிவுரை
கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 110 அடியாக குறைந்துள்ளது. இதனால் மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
மண்டியா,
மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. தமிழ்நாடு-கர்நாடக மாநில மக்களின் வாழ்வாதாரமாக இந்த அணை அமைந்துள்ளது. தற்போது கர்நாடகத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
இந்த நிைலயில் கடந்த சில தினங்களாக கர்நாடகத்தில் சில மாவட்டங்கள் மற்றும் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களுக்கு குடிநீர் தேவைக்காக இந்த அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்காரணமாக அணைக்கு வரும் நீரின் வரத்து நாளுக்கு நாள் குறைந்துகொண்டே செல்கிறது.
110 அடியாக குறைந்தது
124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நேற்றைய நிலவரப்படி 110 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 315 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 3060 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பெங்களூரு, மண்டியா, மைசூரு, ராமநகர் ஆகிய நகரங்கள் மற்றும் தமிழ்நாட்டின் சில மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டுள்ளது.
கே.ஆர்.எஸ். அணையின் நீர்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் மழை பெய்யாததாலும், தொடர்ந்து வெயில் சுட்டெரிப்பதாலும், அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதாலும் நீர்மட்டம் 110 அடியாக குறைந்துள்ளது. தற்போது மழை பெய்ய எந்த வாய்ப்பும் இல்லாததால், அணையின் நீர்மட்டம் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்
இதுகுறித்து நீர்பாசனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கே.ஆர்.எஸ். அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததாலும், கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருவதாலும் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி அணையின் நீர்மட்டம் 120.97 அடியாக இருந்தது. தற்போது 110 அடியாக குறைந்துள்ளது. அதாவது, அணையின் மொத்த கொள்ளளவு 45.05 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) ஆகும். ஆனால் தற்போது 20.08 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
வரும் நாட்களில் அதிக வெப்பம் காரணமாக அணையின் நீர்மட்டம் இன்னும் குறையக்கூடும். நல்ல மழை பெய்தால் தான் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. ஆனால் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது (கடந்த ஆண்டு மார்ச் 16-ந்தேதி கே.ஆர்.எஸ். அணையில் 102.50 அடி தண்ணீர் இருப்பு இருந்தது) இந்த ஆண்டு தண்ணீர் அதிகமாக தான் உள்ளது. ஆனாலும் மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
பாதிப்பு இல்லை
கே.ஆர்.எஸ். அணை பகுதியில் கடந்த 2 வாரங்களாக 34 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை வெயில் இருந்து வருகிறது. இன்று (அதாவது நேற்று) வெயில் அளவு 36 டிகிரி செல்சியசாக உள்ளது. இதன்காரணமாக அணையில் இருந்து ஒரு நாளைக்கு 150 முதல் 250 கனஅடி வரை தண்ணீர் ஆவியாவதால் மூலம் குறைந்து வருகிறது. இதை தவிர அணையில் இருந்து வினாடிக்கு 3060 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு, மண்டியா, ராமநகர் ஆகிய நகரங்களின் குடிநீர் தேவைக்காகவும், தமிழ்நாட்டில் டெல்டா பாசனத்துக்காகவும் திறந்து விடப்பட்டுள்ளது.
பருவமழை தாமதமாக பெய்யும் நிலை உள்ளதாலும், குடிநீர் மற்றும் பாசனத்துக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதாலும், வருகிற மே மாத இறுதிக்குள் அணையின் நீர்மட்டம் 74 அடியை தொடும் (டெட் ஸ்டோரேஜ்) என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் தற்போது தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறப்பதில் எந்த பாதிப்பும் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story