வெள்ளகோவிலில், மில் அதிபர் வீட்டில் நகை-பணம் திருடிய 4 பேர் கைது


வெள்ளகோவிலில், மில் அதிபர் வீட்டில் நகை-பணம் திருடிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 17 March 2020 4:00 AM IST (Updated: 17 March 2020 4:06 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளகோவிலில் மில் அதிபர் வீட்டில் நகை-பணம் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வெள்ளகோவில்,

வெள்ளகோவில் கே.பி.சி.நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது 48). இவர் நிதி நிறுவனம் மற்றும் மில் நடத்தி வருகிறார். இவர் கோவையில் மனைவி, மகன், மகளுடன் வசித்து வருகிறார். வெள்ளகோவில் வீட்டில் கார்த்திகேயனின் தாயார் லட்சுமி(75) இருந்து வந்தார். கார்த்திகேயன் அவ்வப்போது வெள்ளகோவிலுக்கும் வந்து தங்கி செல்வார்.

இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி லட்சுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் வீட்டு அருகே உள்ள ஒரு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். மறுநாள்(11-ந்தேதி) கோவையில் இருந்து கார்த்திகேயன் வெள்ளகோவிலில் உள்ள வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு துணிகள் சிதறி கிடந்தன. பீரோவில் வைக்கப்பட்டு இருந்த ரூ.80 ஆயிரம், 10¼ பவுன் நகைகளை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்று விட்டனர்.

இது குறித்து வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகை எதுவும் பதிவாகி இருக்கிறதா? என ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வந்தனர்.

இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு தி‌ஷா மித்தல் உத்தரவின் பேரில் காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு குமரேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் மில் அதிபர் வீட்டில் திருடிய ஆசாமிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் வெள்ளகோவில் பழைய பஸ் நிலையம் அருகே போலீசார் நேற்று மாலை 5 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 4 பேர் வந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்த போத முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். பின்னர் போலீசார் தீவிரமாக விசாரித்த போது 4 பேரும் வெள்ளகோவில் மில் அதிபர் கார்த்திகேயன் வீட்டில் திருடியவர்கள் என தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் விவரம் வருமாறு:-

வெள்ளகோவில் சிவநாதபுரத்தை சேர்ந்த பாஸ்கரன் மகன் சரத்குமார்(21). இவரது சொந்த ஊர் திண்டுக்கல் பாரதிபுரம். திண்டுக்கல் நரசிங்கபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் லோகுகுமார்(21), திண்டுக்கல் ராஜாக்காபட்டி சேகர் மகன் சார்லஸ் ஜெயசீலன்(21), திண்டுக்கல் வேடப்பட்டியை சேர்ந்த சக்திவேல் மகன் அன்பரசு(எ) ஆகா‌‌ஷ்(20) ஆகியோர் ஆவார்கள். கைதான அவர்களிடம் இருந்து 3 ஆயிரம் ரொக்கம், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story