கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி: பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
கொரோனா வைரஸ் பரவுவதன் எதிரொலியாக பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து கோவில் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தளி,
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அத்துடன் அமணலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழவும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இங்கு வருவது உண்டு. குறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.
இந்த நிலையில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் மளமளவென்று மற்ற பகுதிகளிலும் பரவியது. இதனால் ஏராளமான பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள். அது மட்டுமின்றி கொரோனா வைரஸ் உயிர்பலி வாங்கியும் வருகிறது. மேலும் உலக நாடுகளிலும் அதன் தாக்கம் காணப்படுகிறது. அதை தடுக்கும் நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக வருகிற 31-ந் தேதி வரையிலும் பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதையும், சுற்றுலா தலங்களுக்கு செல்வதையும் தவிர்க்குமாறும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த நிலையில் திருமூர்த்திமலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கோவில் நிர்வாகம் நேற்று முதல் தடை விதித்துள்ளது. அந்த தடை அரசிடமிருந்து மறு உத்தரவு வரும் வரையிலும் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பஞ்சலிங்க அருவிக்கு செல்லும் பாதையில் இரும்பு தடுப்பு வைத்து தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் தடையை மீறி செல்லாமல் இருப்பதற்காக கோவில் பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story