பாந்திராவில் ஓடும் காரில் பெண் மானபங்கம் ‘டேட்டிங் ஆப்’ நண்பர் கைது


பாந்திராவில்   ஓடும் காரில் பெண் மானபங்கம்   ‘டேட்டிங் ஆப்’ நண்பர் கைது
x
தினத்தந்தி 16 March 2020 11:32 PM GMT (Updated: 16 March 2020 11:32 PM GMT)

பாந்திராவில் ஓடும் காரில் பெண்ணை மானபங்கம் செய்த ‘டேட்டிங் ஆப்’ நண்பர் கைது செய்யப்பட்டார்.

மும்பை, 

மும்பையை சேர்ந்த 28 வயது பெண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் ‘டேட்டிங் ஆப்’ மூலம் வடலாவை சேர்ந்த ராஜ் தெதியா(29) என்ற வாலிபர் அறிமுகம் ஆனார். 2 பேரும் செல்போன் எண்ணை பரிமாறி பேசத்தொடங்கினர். இதில் சம்பவத்தன்று இரவு 10.30 மணியளவில் 2 பேரும் செம்பூர் பகுதியில் உள்ள பாரில் சந்தித்து பேசினர். பின்னர் ராஜ் தெதியா, பெண்ணை பாந்திராவில் உள்ள பிரபல பப்பிற்கு அழைத்து சென்றார். அங்கு வாலிபர் மதுகுடித்துள்ளார். அப்போது அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பெண் அங்கு இருந்து வெளியேற முயன்றார். இதில் வாலிபர், பெண்ணை காரில் சென்றுவிடுவதாக கட்டாயப்படுத்தி ஏற்றினார். நள்ளிரவு 1.30 மணியளவில் 2 பேரும் காரில் புறப்பட்டனர்.

காரில் மானபங்கம்

இதில் கார் புறப்பட்ட சில நிமிடங்களில் வாலிபர், பெண்ணை தொட்டு மானபங்கம் செய்தார். மேலும் முத்தம் கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், கழிவறை செல்ல வேண்டும் என கூறி காரை நிறுத்த சொன்னார். பின்னர் அங்கு இருந்து தப்பிஓடினார். எனினும் வாலிபர் பெண்ணை காரில் விடாமல் துரத்தினார். இந்தநிலையில் அந்த வழியாக ரோந்து வந்த போலீசாரிடம் அந்த பெண் நடந்த சம்பவத்தை கூறினார். பெண், போலீஸ்காரரிடம் பேசுவதை கவனித்த வாலிபர் காரில் தப்பிச்சென்றார்.

இந்தநிலையில் போலீஸ்காரர் சம்பவம் குறித்து புகார் அளிக்குமாறு பெண்ணிடம் அறிவுறுத்தினார். அதன்பேரில் பெண், வாலிபர் மீது பாந்திரா போலீசில் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜ் தெதியாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story