யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் அமலாக்கத்துறை காவல் 20-ந் தேதி வரை நீட்டிப்பு
யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் அமலாக்கத்துறை காவலை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
மும்பையை தலைமையகமாக கொண்டு 2004-ம் ஆண்டு யெஸ் வங்கி தொடங்கப்பட்டது. 14 ஆண்டுகளில் இந்த வங்கியை ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளுடன், 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்களுடன் நாட்டின் 5-வது பெரிய தனியார் வங்கியாக வளர்த்தெடுத்தவர், அதன் நிறுவனர் ராணா கபூர்(வயது62).
இந்தநிலையில் வாராக்கடன் பிரச்சினையில் ரிசர்வ் வங்கி இந்த மாத தொடக்கத்தில் யெஸ் வங்கி செயல்பாட்டை முடக்கியது. வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை கடந்த 8-ந் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது.
காவல் நீட்டிப்பு
ராணா கபூர் ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கி கொண்டு அதிகளவு கடன் வழங்கியதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இந்தநிலையில் அமலாக்கத்துறையினர் விசாரணை காலம் முடிந்து நேற்று ராணா கபூரை மும்பை சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது கோர்ட்டில் ராணா கபூர் தனக்கு நீண்ட கால ஆஸ்துமா, மன அழுத்த பிரச்சினை இருப்பதாக கூறினார்.
எனினும் நீதிபதி ராஜ்வைதியா அவரது அமலாக்கத்துறை காவலை 20-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதன் மூலம் அவரது அமலாக்கத்துறை காவல் 2-வது தடவையாக நீட்டிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story