200 குளங்கள் பாசன வசதி பெறும் கடனாநதி–கல்லாறை இணைக்கும் வெள்ளநீர் கால்வாய் திட்டம் தொடங்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


200 குளங்கள் பாசன வசதி பெறும் கடனாநதி–கல்லாறை இணைக்கும் வெள்ளநீர் கால்வாய் திட்டம் தொடங்கப்படுமா?  பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 17 March 2020 10:30 PM GMT (Updated: 17 March 2020 1:42 PM GMT)

கோவில்பட்டி, கயத்தாறு, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய தாலுகாக்கள் மானாவாரி நிலங்கள் நிறைந்த வானம் பார்த்த பூமியாகும்.

ஓட்டப்பிடாரம், 

200 குளங்கள் பாசன வசதி பெறும் வகையில், கடனாநதி–கல்லாறை இணைக்கும் வெள்ளநீர் கால்வாய் திட்டம் தொடங்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

வெள்ளநீர் கால்வாய் திட்டம் 

தூத்துக்குடி மாவட்டத்தின் வடபகுதியான கோவில்பட்டி, கயத்தாறு, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய தாலுகாக்கள் மானாவாரி நிலங்கள் நிறைந்த வானம் பார்த்த பூமியாகும். இப்பகுதியில் மக்காச்சோளம், கம்பு, உளுந்து, பருத்தி, பாசி பயறு, மிளகாய் போன்றவற்றையே பெரும்பாலான விவசாயிகள் பயிரிடுகின்றனர். இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்று விட்டது.

இதையடுத்து ஆண்டுதோறும் மழைக்காலத்தில் தாமிரபரணி ஆற்றில் வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை மேற்கண்ட தாலுகாக்கள் பயன்பெறும் வகையில், திருப்பி கொண்டு வரும் வகையில், கடனாநதி–கல்லாறை இணைக்கும் வெள்ளநீர் கால்வாய் திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

200 குளங்கள் பாசன வசதி 

இதையடுத்து தென்காசி, நெல்லை மாவட்டங்களில் பாயும் தாமிரபரணி, கடனாநதி, சிற்றாறு ஆகிய ஆறுகளையும், தூத்துக்குடி மாவட்டத்தில் பாயும் உப்போடை எனும் கோரம்பள்ளம் ஆறு, கல்லாறு எனும் மலட்டாறு ஆகியவற்றையும் இணைக்கும் வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற பரிந்துரைக்கப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில், அங்குள்ள நிலத்தின் மட்ட அளவு, மண்பரிசோதனை செய்வதற்கு கடந்த ஆண்டு ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த திட்டத்தின்படி நெல்லை மாவட்டம் கீழ ஆம்பூர் அருகே காக்கநல்லூர் அடைச்சாணி பகுதியில் இருந்து மானூர் அருகே பள்ளமடை குளம், அழகியபாண்டியபுரம் அருகே சிற்றாறு, கயத்தாறு அருகே உப்போடை, மணியாச்சி மலைப்பட்டி அருகே உப்போடை, ஓட்டப்பிடாரம் அருகே கொம்பாடி ஓடை, எப்போதும்வென்றான் சோழபுரம் அருகே கல்லாறு ஆகியவற்றை இணைப்பதற்கு திட்டமிடப்பட்டது. சுமார் 117 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த வெள்ளநீர் கால்வாயை அமைத்தால், அப்பகுதியில் உள்ள சுமார் 200 குளங்கள் பாசன வசதி பெறும்.

பொதுமக்கள் எதிர்பார்ப்பு 

இந்த வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றி, அதில் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் ஒரு வாரத்துக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட்டாலும், வறண்ட பகுதி நிலங்கள் அனைத்தும் செழுமை பெறும். நிலத்தடி நீர்மட்டம் உயரும். குடிநீர் தட்டுப்பாடு தீரும்.

ஒவ்வொரு தேர்தலின்போதும் அனைத்து கட்சிகளும் தங்களது பிரதான தேர்தல் வாக்குறுதியாக கடனாநிதி–கல்லாறை இணைக்கும் வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை செயல்படுத்துவதாக உறுதி அளித்தாலும், வெள்ளநீர் கால்வாய் அமைப்பதற்கான பணிகள் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு உள்ளது. எனவே கடனாநதி–கல்லாறை இணைக்கும் வெள்ளநீர் கால்வாய் திட்டம் விரைவில் தொடங்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Next Story