கொரோனா வைரஸ் எதிரொலி: மணிமுத்தாறு அருவிப்பாதை மூடப்பட்டது
கொரோனா வைரஸ் எதிரொலியால் மணிமுத்தாறு அருவிப்பாதை நேற்று மூடப்பட்டது.
அம்பை,
கொரோனா வைரஸ் எதிரொலியால் மணிமுத்தாறு அருவிப்பாதை நேற்று மூடப்பட்டது. இதனால் மணிமுத்தாறு அருவிக்கரை வெறிச்சோடி காணப்பட்டது.
அருவிப்பாதை மூடப்பட்டது
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி வருகிற 31–ந் தேதி வரை பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்களை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் கூடும் இடங்களான சுற்றுலா தளங்களையும் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் மணிமுத்தாறு அருவிக்கு செல்லும் வன சோதனை சாவடி மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் இல்லாமல் மணிமுத்தாறு அருவி வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.
கோவிலில் பக்தர்களுக்கு பரிசோதனை
நேற்று பாபநாசம் பாபநாச சுவாமி கோவிலில் பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்கள் கொரோனா வைரஸ் பரிசோதனை கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டன.
அம்பை நகராட்சி ஆணையர் ஜின்னா தலைமையில் சுகாதார ஆய்வாளர் சிதம்பர ராமலிங்கம் முன்னிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து ஆட்டோக்களும் நகராட்சிக்கு கொண்டு வரப்பட்டு லைசால் கிருமி நாசினி தெளிப்பான் மூலம் தெளிக்கப்பட்டது. பஸ்நிலையத்தில் அனைத்து பஸ்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story