கால்நடைகளுக்கான மருத்துவ வாகன சேவை ; அரசு தலைமை கொறடா தொடங்கி வைத்தார்
அரியலூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மருத்துவ வாகன சேவையை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், பளிங்காநத்தம் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கால்நடைகளுக்கான நடமாடும் கால்நடை மருத்துவ வாகன சேவையினை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், மாவட்ட கலெக்டர் ரத்னா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அப்போது அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் பேசியதாவது:-
தமிழக கால்நடை பராமரிப்புத்துறை மூலம் அவசர காலங்களில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம் வழங்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கால்நடை மருந்தகங்கள் மற்றும் கிளை நிலையங்கள் மூலம் கால்நடைகளுக்கான சிகிச்சை மற்றும் கருவூட்டல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கால்நடை மருத்துவ வசதி இல்லாத கிராமங்கள் தோறும் முகாம்கள் நடத்தியும், விவசாயிகளின் கால்நடைகளுக்கு சிகிச்சை மேற்கொண்டு கால்நடை நலன் பாதுகாக்கப்படுகிறது. கால்நடைகளை சிகிச்சைக்காக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல இயலாத பட்சத்தில், நடமாடும் கால்நடை மருத்துவ வாகனத்தின் இலவச அழைப்பு எண்ணான 1962-க்கு அழைத்தால், கால்நடை வளர்ப்போரின் இல்லங்களுக்கே நேரடியாக வந்து இலவசமாக சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், மேல்சிகிச்சை தேவைப்படும் கால்நடைகளுக்கு வேறு மாவட்டங்களில் உள்ள கால்நடை மருந்தகங்களுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கால்நடை வளர்ப்போர் அனைவரும் இத்திட்டத்தை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு தங்கள் கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சந்திரசேகர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சக்திவேல், ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் சுதா, ஆனந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) பாலாஜி, இணை இயக்குனர் (கால்நடை பராமரிப்புத்துறை) ஹமீதுஅலி, ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன், தாசில்தார் கதிரவன் மற்றும் சுகாதாரத்துறை மருத்துவ அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story