குழந்தைகளுக்கு வீடு தேடி சென்று உணவு பொருட்கள் வழங்கும் அங்கன்வாடி பணியாளர்கள்
கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக குழந்தைகளுக்கு வீடு தேடி சென்று உணவு பொருட்களை அங்கன்வாடி பணியாளர்கள் வழங்கி வருகின்றனர்.
அன்னவாசல்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் வருகிற 31-ந்தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் சினிமா தியேட்டர், வணிக வளாகங்கள், விளையாட்டு அரங்குகள், சுற்றுலா தலங்கள், டாஸ்மாக் பார்களை மூடவும் உத்தரவிடப்பட்டது.
இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், மருத்துவமனைகள், வழிப்பாட்டு தலங்கள், திருமண மண்டபங்கள் உள்பட பல்வேறு இடங்களில் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகளை பேரூராட்சி பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் அங்கன்வாடி மையங்களையும் வருகிற 31-ந்தேதி வரை மூடப்பட வேண்டும் என்றும், இம்மையங்களில் உணவருந்தும் குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கான உணவுப் பொருட்களை அந்தந்த குடும்பத்தினரிடம் அங்கன்வாடி மைய அமைப்பாளர்கள் வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து அங்கன்வாடி மையங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகளின் வீட்டிற்கே நேரடியாக சென்று அரிசி, பருப்பு, முட்டை, கொண்டை கடலை, பாசிப்பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கி வருகின்றனர்.
Related Tags :
Next Story