கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தியேட்டர்கள்- விளையாட்டு அரங்குகள் மூடல்


கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தியேட்டர்கள்- விளையாட்டு அரங்குகள் மூடல்
x
தினத்தந்தி 18 March 2020 3:45 AM IST (Updated: 17 March 2020 9:41 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் கரூர் மாவட்டம் முழுவதும் சினிமா தியேட்டர்கள், விளையாட்டு அரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

கரூர், 

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியர்கள் யாரும் வெளிநாடு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாடுகளி லிருந்து வருபவர்களின் உடல்நிலையை தீவிரமாக கண் காணித்த பின்னரே விமான நிலையத்திலிருந்து வெளியே அனுப்பி வைக்கிறார்கள். இந்த நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு அரங்குகள், டாஸ்மாக் பார்கள் உள்ளிட்டவற்றை மூடவும், திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதித்தும், பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 31-ந்தேதி வரை விடுமுறை அளித்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் நேற்று கரூர் நகரில் 9-ம், குளித்தலையில் 3-ம், காவல்காரன்பட்டியில் 1-ம் என மொத்தமுள்ள 13 சினிமா தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதனை அறியாமல் பொதுமக்கள் சிலர் சினிமா பார்க்க வந்து திரும்பி சென்றதை காண முடிந்தது. கரூர் தாந்தோணிமலையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கம் என மாவட்டத்தில் உள்ள பல்வேறு விளையாட்டு அரங்கின் நுழைவு வாயிலில் பூட்டு போடப்பட்டு மூடப்பட்டது. இதனால் காலையில் நடைபயிற்சி மேற்கொள்ள வந்தவர்கள், வெளியிடங்களில் அதனை மேற்கொண்டனர். தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருப்பதால் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கிரிக்கெட் விளையாடுவதற்காக மைதானத்திற்கு வந்து அது பூட்டி கிடந்ததை அறிந்ததும் திரும்பி சென்றனர்.

எனினும் கரூர் பள்ளிகளிலுள்ள தேர்வு மையங்களில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பொதுத்தேர்வு போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. மற்றபடி பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்படவில்லை. கரூர் ஜவகர்பஜாரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தினை பார்வையிட பார்வையாளர்கள் யாருக்கும் உள்ளே அனுமதி வழங்கப்படவில்லை.

ஆனால் ஊழியர்கள் மட்டும் உள்ளே அமர்ந்து வழக்கமான பணிகளை கவனித்தனர். அங்கு நடைபெற இருந்த சில நிகழ்ச்சிகளும் ரத்தானது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பொதுமக்களின் வருகை வழக்கத்தை விட சற்று குறைவாகவே நேற்று இருந்தது. அவர்களையும் மருத்துவ குழுவினர் நவீன தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்ப நிலையை சோதித்து பார்த்தே உள்ளே அனுப்பினார்கள். இதே போல் டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டன. எனினும் கரூர் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. வேலைக்கு செல்வோர்கள் உள்ளிட்டோர் வழக்கமாக பஸ், ரெயில் உள்ளிட்டவற்றில் போக்குவரத்தினை மேற்கொண்டனர்.

கரூர் மனோகரா கார்னர், திருக்காம்புலியூர் ரவுண்டானா, பெரியார் வளைவு உள்ளிட்ட இடங்களில் போலீசார் முகமூடி அணிந்தவாறு போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டதை காண முடிந்தது. பணியை முடித்து விட்டு நேராக போலீஸ் நிலையம், வீடுகளுக்கு சென்று கை, முகம், காலினை நன்றாக சோப்பு போட்டு கழுவி கொள்ளுமாறு போலீஸ் உயரதிகாரிகள், அந்த போலீசாருக்கு அறிவுறுத்தினர். 

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் துப்புரவு பணியாளர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்தது. அரசு உத்தரவு நடவடிக்கைகள் மாவட்டத்தில் எவ்வாறு செயல்படுத்தப்பட்டுள்ளது? என்பது பற்றி மாவட்ட நிர்வாக அதிகாரிகள், மருத்துவ குழுவினருடன் சென்று ஆங்காங்கே பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

Next Story