கோடை நெருங்கி விட்டதால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி ‘தினமும் 300 லிட்டர் தண்ணீர் சேமியுங்கள்’ சென்னை மக்களுக்கு குடிநீர் வாரியம் வேண்டுகோள்


கோடை நெருங்கி விட்டதால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி   ‘தினமும் 300 லிட்டர் தண்ணீர் சேமியுங்கள்’   சென்னை மக்களுக்கு குடிநீர் வாரியம் வேண்டுகோள்
x
தினத்தந்தி 18 March 2020 4:15 AM IST (Updated: 17 March 2020 11:55 PM IST)
t-max-icont-min-icon

கோடைகாலம் நெருங்கி விட்டதால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி தினமும் 300 லிட்டர் தண்ணீர் சேமிக்க வேண்டும் என சென்னை மக்களுக்கு குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னை, 

கோடைகாலம் வந்தாலே சென்னை மாநகரில் குடிநீர் பிரச்சினை தலைதூக்குவது வழக்கம். புழல், சோழவரம், பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் இருந்து சென்னைக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த 4 ஏரிகளிலும் மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 257 மில்லியன் கன அடியாகும்.

ஆனால் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த ஏரிகளில் வெறும் 895 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் இருப்பு இருந்ததால் தண்ணீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மாற்று ஏற்பாடாக மீஞ்சூர், நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள், கல்குவாரிகள், நெய்வேலி நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் விவசாய விளைநிலங்களில் உள்ள தண்ணீர் என பல்வேறு நீர்நிலைகளில் இருந்து கொண்டு வரப்பட்டு சென்னை மக்களின் தாகம் தீர்க்கப்பட்டது.

விழிப்புணர்வு பலகைகள்

இந்த ஆண்டு புழல் உள்பட 4 ஏரிகளிலும் நேற்று முன்தினம் நிலவரப்படி 6 ஆயிரத்து 199 மில்லியன் கன அடி (6 டி.எம்.சி.) இருப்பு உள்ளது. இதில் பூண்டி ஏரியில் இருந்து 352 மில்லியன் கன அடியும், புழலில் இருந்து 127 கன அடியும், செம்பரம்பாக்கத்தில் இருந்து 68 மில்லியன் கன அடி தண்ணீரும் சென்னைக்கு வினியோகம் செய்யப்படும்.

அந்த தண்ணீர் கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கோடைகாலம் நெருங்கி விட்டதால் குடிநீரை வீணடிக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று சென்னை மக்களுக்கு குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பலகைகளை வைத்து உள்ளது.

300 லிட்டர் தண்ணீர்

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:&

கோடைகாலம் நெருங்கி விட்டதால் சென்னை மாநகருக்கு வினியோகம் செய்ய புழல் உள்பட 4 ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. சென்னை மக்கள் இந்த தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இயற்கை வழங்கும் விலைமதிப்பற்ற நீரை வீணாக்காமல் பாதுகாக்க வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்தினரும் குளிப்பது, கழிப்பறை உபயோகம், துணி துவைத்தல், வாகனங்கள் கழுவுதல், பல் துலக்குதல், முகச்சவரம் செய்தல், தொட்டி மற்றும் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுதல் போன்றவற்றுக்கு வாளிகள் மூலம் உபயோகித்தால் குறைந்தபட்சம் தினசரி 300 லிட்டர் வரை தண்ணீர் சேமிக்க முடியும்.

லாரிகளில் வினியோகம்

குறுகிய சாலை மற்றும் தெருக்களில், மினி லாரிகளில் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர போதிய அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால், பெரும்பாலான பகுதிகளுக்கு, குழாய்கள் மூலம் முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை.

அந்தப்பகுதிகளுக்கும் தனியார் ஒப்பந்த லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அங்கு 2 ஆயிரம் மற்றும் 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story