கொரோனா பீதி எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 38 விமானங்கள் ரத்து
தமிழகத்தில் கொரோனா பீதி எதிரொலி காரணமாக சென்னைக்கு வந்து செல்ல வேண்டிய 38 விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆலந்தூர்,
சீனாவை தொடர்ந்து உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்றன. இதனால் பல வெளிநாடுகளில் சுற்றுலா விசாவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
விமான பயணங்கள் மூலமாக கொரோனா வைரஸ் பரவக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நவீன சோதனை கருவிகள் அமைக்கப்பட்டு உள்ளன. பன்னாட்டு முனையத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மூலம் ஊழியர்கள் வரை முககவசங்களை அணிந்தே பணியாற்றுகின்றனர்.
விமான சேவை ரத்து
விமானங்களில் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்ற பீதியால் விமானங்களில் பயணம் செய்யபவர்களின் எண்ணிக்கை குறைந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நம்நாட்டில் ஏப்ரல் 14-ந் தேதி வரை வெளிநாட்டு பயணிகளுக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைத்து உள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பயணிகளின் வரத்து குறைவால் குவைத் மற்றும் இலங்கையில் இருந்து வர வேண்டிய தலா 3 விமானங்கள், மலேசியா, தாய்லாந்தில் இருந்து தலா 2 விமானங்கள், தோகா, சிங்கப்பூர், ரியாத், துபாய், மஸ்கட் ஆகிய இடங்களில் இருந்து வர வேண்டிய மொத்தம் 15 விமானங்களும், அதுப்போல் சென்னையில் இருந்து மேற்கண்ட நாடுகளுக்கு செல்ல வேண்டிய 15 விமானங்களும் என 30 பன்னாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளன.
வெறிச்சோடியது
அதுப்போல் சென்னையில் இருந்து ஐதராபாத், பெங்களூரூ, கொச்சி நகரங்களுக்கு சென்றுவிட்டு திரும்பி வர வேண்டிய 8 விமான சேவையும் ரத்து செய்யப்பட்டது.
போதிய பயணிகள் இல்லாததால் விமானங்களின் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு நிலையம் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
Related Tags :
Next Story