“கொரோனா வைரஸ்” பாதிப்பை தடுக்கும் வகையில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்


“கொரோனா வைரஸ்” பாதிப்பை தடுக்கும் வகையில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்
x
தினத்தந்தி 17 March 2020 11:00 PM GMT (Updated: 17 March 2020 7:56 PM GMT)

“கொரோனா வைரஸ்” பாதிப்பை தடுக்கும் வகையில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் சி.கதிரவன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

ஈரோடு,

“கொரோனா வைரஸ்” பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் உலகம் முழுவதும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் “கொரோனா வைரஸ்” தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பொதுமக்களை அண்டிவிடக்கூடாது என்பதற்காக முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் திரையரங்குகள், மால்கள் உள்ளிட்ட மையங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. இந்தநிலையில் பெரும் நிறுவனங்கள் மற்றும் மத வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் கூடுவதால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு விடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆலோசனை கூட்டம்

இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இந்து கோவில்கள் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், முஸ்லிம் பள்ளிவாசல்கள் சார்பில் மாவட்ட அரசு காஜி கிபாயத்துல்லா மற்றும் காஜிக்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் ஜெபக்கூடங்கள் சார்பில் அந்த அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா, மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கோமதி, மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உணர்ச்சிகரமான விஷயம்

கூட்டத்தில் கலெக்டர் சி.கதிரவன் பேசும்போது கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. மத வழிபாட்டு தலங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமாகிறது. இது சற்று உணர்ச்சிகரமான விஷயம். ஆனால், அத்தியாவசியமான விஷயமாகும்.

நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு இறை நம்பிக்கை கொண்டவர்களாக இருப்போம். இந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும். இந்த பள்ளிவாசலுக்கு செல்ல வேண்டும். இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று நமக்கும் ஒரு நம்பிக்கை இருக்கும். ஆனால், மதங்கள், சட்டங்கள், ஐதீகங்கள் அனைத்தும் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டவைதான். எனவே வழிபாடுகளை தொடர்ந்து செய்ய மனிதர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

கூடவேண்டாம்

ஆலயங்கள், கோவில்கள், பள்ளிவாசல்கள் அங்கேயே இருக்கும். நாம் பாதுகாப்பாக இருந்தால் ஒரு மாத காலம் கழித்து நமது வழிபாடுகளை தொடர முடியும். அதற்காக யாரும் கோவில்களுக்கு அல்லது பள்ளிவாசல், ஆலயங்களுக்கு செல்லக்கூடாது என்று கூறவில்லை. அதிகமாக யாரும் கூடி விடாமல் இருக்க வேண்டும். அதிக மக்கள் கூடுவதால் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பது முக்கியம். வழக்கமாக 500 பேர் கூடுவதாக இருந்தால், அதை தவிர்த்து 50 பேர் அல்லது அதற்கும் குறைவானர்கள் வந்தால் நன்றாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைக்கு அனைவரும் கலந்து கொள்வதை தவிர்த்து, வீடுகளிலேயே பிரார்த்தனை செய்ய முயற்சிக்கலாம். இதுபோல் பள்ளிவாசல்களிலும் குறைந்த அளவில் மக்கள் வருவது நல்லது. கோவில்களில் அதிக மக்களை கூடச்செய்ய வேண்டாம். புதிதாக யாரும் அன்னதானம் வழங்க அனுமதிக்க வேண்டாம். வேண்டுதல் தேர் இழுக்க ஒரு மாதம் தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே வேண்டுதல் தேர் கட்டணம் செலுத்தியவர்களுக்கும் தவிர்க்க முடியாத வேண்டுதல் தவிர்த்து மற்றவர்களுக்கு கட்டணத்தை திரும்ப செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக நன்மை

இந்த மாதம் நடைபெற வேண்டிய கோவில் திருவிழாக்களை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்பதை விட, மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒன்று அல்லது 2 மாதங்கள் தள்ளி வைக்க சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகிகள், இந்து சமயஅறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டும்.

இது முற்றிலும் மக்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்படும் நடவடிக்கை. மத வேறுபாடு இன்றி, அனைத்து தரப்பு மக்களும் அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு கட்டுப்படும்போது, சமூகத்துக்கு நன்மை செய்தவர்களாக இருப்போம்.

இவ்வாறு கலெக்டர் சி.கதிரவன் வேண்டுகோள் விடுத்தார். முன்னதாக பெரும் நிறுவனங்கள், ஜவுளி மற்றும் நகைக்கடை நிர்வாகிகளிடம் பேசிய கலெக்டர் சி.கதிரவன் முடிந்தவரை கடைகளுக்கு விடுமுறை அளித்து கடைகளில் பராமரிப்பு பணி உள்ளிட்டவை இருந்தால் அவற்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Next Story