கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க திருவள்ளூர் பஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிப்பு


கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க   திருவள்ளூர் பஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிப்பு
x
தினத்தந்தி 18 March 2020 3:30 AM IST (Updated: 18 March 2020 1:43 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரசை கட்டுப்படுத்த திருவள்ளூர் பஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

திருவள்ளூர், 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளை வருகிற 31-ந்தேதி வரை மூட உத்தரவிட்டார். மேலும் சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு அரங்குகள், டாஸ்மாக் பார்களை மூடவும் உத்தரவிட்டார்.

கொரோனா வைரஸ் காய்ச்சலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின் பேரில், நேற்று திருவள்ளூர் பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக பஸ் நிலையங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

செயல்முறை விளக்கம்

அப்போது திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம் தலைமையில், சுகாதார அலுவலர் செல்வராஜ், சுகாதார ஆய்வாளர்கள் ரமே‌‌ஷ், வெயில் முத்து, சுதாகர் மற்றும் திரளான நகராட்சி பணியாளர்கள் பஸ் பயணிகளிடம் கொரோனா வைரஸ் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

மேலும் கை கழுவும் முறை குறித்து பொதுமக்களிடம் எடுத்துக்கூறி பஸ் நிலையத்திலேயே செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.

அப்போது திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்த தமிழகம் மற்றும் ஆந்திரா, கேரளா மாநில பஸ்களுக்கு நகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்தனர்.

Next Story