மேம்பாலத்தின் கீழ் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
திருவள்ளூர் அருகே மேம்பாலத்தின் கீழ் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த பூந்தமல்லி ஒன்றியம் மேல்மனம்பேடு, வெள்ளவேடு பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழே மீன் கழிவுகள், கோழி இறைச்சி கழிவுகள், மருந்து கழிவு பொருட்கள் போன்றவை தினந்தோறும் கொட்டப்பட்டு குவியல் குவியலாக ஆங்காங்கே உள்ளது.
இதனால் அந்த இடத்தில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அதன் அருகே பஸ் நிலையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. அங்கிருப்பவர்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். இதன் காரணமாக தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுகுறித்து அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுநாள் வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே மேல்மனம்பேடு, வெள்ளவேடு பகுதியில் மேம்பாலத்தின் அடியில் குவிக்கப்பட்டிருக்கும் கழிவுப்பொருட்களை அதிகாரிகள் இனிமேலும் காலதாமதம் செய்யாமல் அகற்றி, இதுபோன்று அங்கு யாரும் கழிவுகளை கொட்டாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story