கொரோனா வைரஸ் தடுப்பு ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது


கொரோனா வைரஸ் தடுப்பு ஆய்வு கூட்டம்   கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 18 March 2020 4:00 AM IST (Updated: 18 March 2020 2:22 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தடுப்பு ஆய்வு கூட்டம் கலெக்டர் பொன்னையா தலைமையில் நடந்தது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக கொரோனா வைரஸ் விழிப்புணர்வு மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் பொன்னையா கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் அனைத்து துறையை சேர்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் போன்றவற்றில் தூய்மைபடுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து ஆஸ்பத் திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களுக்கு அன்றாடம் வருகை புரியும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்கான துண்டு பிரசுரங்கள் அளித்து தொற்று நீக்கி கொண்டு கைகழுவும் முறைகளை பற்றி எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், போன்ற முக்கிய இடங்களில் பொதுமக்கள் தொற்று நீக்கி கை கழுவும் முறைகளை சுகாதார பணியாளர்களை கொண்டு மக்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.

பொதுமக்கள் அதிக அளவில்கூடும் முக்கிய இடங்களில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கிட அனைத்துத் துறை பணியாளர்களும் இப்பணியில் ஈடுபட வேண்டும். சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியை அணுக வேண்டும். வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் கூடுவதை அடுத்த 15 நாட்களுக்கு தவிர்க்கவும் அறிவுறுத்த வேண்டும்.

அனைத்து துறை அலுவலர்களும்

மேலும் காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்படும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்படுத்திட வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளை போர்கால அடிப்படையில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் துறை அதிகாரி என் சுந்தரமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணன், இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) ஜீவா, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) பழனி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனர் சற்குணா, உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா, பொது சுகாதார துறையை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story