கன்னியாகுமரியில் கழிவுநீர் பிரச்சினையை ஒரு மாதத்துக்குள் தீர்க்க வேண்டும் அதிகாரிகளுக்கு, தளவாய்சுந்தரம் அறிவுறுத்தல்


கன்னியாகுமரியில் கழிவுநீர் பிரச்சினையை ஒரு மாதத்துக்குள் தீர்க்க வேண்டும் அதிகாரிகளுக்கு, தளவாய்சுந்தரம் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 18 March 2020 4:30 AM IST (Updated: 18 March 2020 4:29 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி கடலில் கழிவுநீர் கலக்கும் பிரச்சினையை ஒரு மாதத்துக்குள் தீர்க்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தளவாய் சுந்தரம் அறிவுறுத்தினார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள விடுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கடலில் கலக்கிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

கன்னியாகுமரி கடலில் கழிவுநீர் கலப்பதை தடுப்பது குறித்து ஆலோசனைக்கூட்டம் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அரங்கில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தலைமையில் நடந்தது. இதில் பங்குத்தந்தை ஜோசப் ரொமால்ட், துணைத்தலைவர் நாஞ்சில் மைக்கேல், செயலாளர் சந்தியா வில்வராயர், பொருளாளர் வினி, துணை செயலாளர் தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விடுதி உரிமையாளர்கள், மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களது கோரிக்கைகளை கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ், உதவி என்ஜினீயர் இர்வின் ஜெயராஜ் ஆகியோரிடம் எடுத்து கூறினார்கள். அப்போது தங்கள் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் கடலில் கலப்பதை தடுத்து, அந்தந்த பகுதிகளில் உள்ள விடுதிகளின் அருகாமையில் செப்டிக் டேங்க் அமைத்து அதில் கழிவுநீரை விட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.

தீர்வு

அதன்பிறகு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் பேசும் போது கூறியதாவது:-

கன்னியாகுமரி பேரூராட்சி பகுதியில் சாக்கடை பிரச்சினை நீண்ட நாட்களாக இருப்பதாகவும், விடுதி உரிமையாளர்கள் கழிவுநீரை வெளியில் விடுவதாகவும், இதனால் நோய் பரவ வாய்ப்புள்ளதாகவும் பொதுமக்கள் கூறினார்கள். கழிவுநீரை விரைவில் அகற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) கண்ணன் மற்றும் என்ஜினீயர், செயல் அலுவலர் ஆகியோர் தெரிவித்துள்ளார்கள். எனவே 15 நாட்களுக்கு ஒரு முறை விடுதி உரிமையாளர்கள் அனைவரும் ஒன்று கூடி, கழிவு நீரை அகற்றுவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விவாதித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

மக்களின் சுகாதாரம் பெரியது என நினைக்க கூடியது அ.தி.மு.க. அரசு. ஒரு மாத காலத்துக்குள் கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த பிரச்சினையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story