மாவட்ட செய்திகள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: பொது இடங்களில் மக்கள் கூட்டம் குறைந்தது + "||" + Corona virus threat echo: The crowds in public areas were low

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: பொது இடங்களில் மக்கள் கூட்டம் குறைந்தது

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: பொது இடங்களில் மக்கள் கூட்டம் குறைந்தது
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக திருப்பூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மக்கள் கூட்டம் குறைந்தது. பள்ளி, தியேட்டர், டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டன.
திருப்பூர்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு அரங்குகள், டாஸ்மாக் பார்களை வருகிற 31-ந் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகள் நேற்று முதல் மூடப்பட்டன. சினிமா தியேட்டர்கள், டாஸ்மாக் பார்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.

திருப்பூரில் பிரசித்தி பெற்ற விஸ்வேஸ்வரசாமி கோவில் உள்ளது. இங்கு தினசரி பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். ஆனால் கொரோனா வைரஸ் பீதி காரணமாக நேற்று விஸ்வேஸ்வரசாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் மிகக்குறைவாகவே இருந்தது. அதே போல வீரராகவபெருமாள் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் கூறும்போது, ‘மாநகராட்சி நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட தட்டிகள் வைக்க வலியுறுத்தி இருந்தது. அதன்படி, கோவில் வளாகத்தில் கொடி மரத்தின் அருகில் விழிப்புணர்வு தட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கைகழுவ சோப்பு வாங்கி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் மருந்து தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் 92 மேல்நிலைப்பள்ளிகள், 87 உயர்நிலைப்பள்ளிகள், 136 மெட்ரிக் பள்ளிகள், 61 சி.பி.எஸ்.இ.பள்ளிகள், 173 நர்சரி பள்ளிகள், 263 நடுநிலைப்பள்ளிகள், 953 தொடக்கப்பள்ளிகள் என மொத்தம் 1,765 பள்ளிகள் உள்ளன.

அனைத்து பள்ளிகளுக்கும் வருகிற 31-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பள்ளிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. அதேசமயம் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வந்திருந்தனர்.

கல்லூரிகளில் அடுத்த மாதம் (ஏப்ரல்) முதல்வாரத்தில் இருந்து பருவத்தேர்வுகள் நடைபெற உள்ளது. அதையொட்டி நேற்று கல்லூரிகளில் மாணவ-மாணவிகளுக்கு செய்முறை தேர்வு நடைபெற்றது.

ஏற்கனவே அறிவித்தபடி கல்லூரி பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்ததால் செய்முறை தேர்வு தொடர்ந்து நடைபெறும் என்று கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்தனர். இதனால் திருப்பூரில் கல்லூரிகள் மூடப்படவில்லை.

திருப்பூர் பூ மார்க்கெட்டில் நேற்று வழக்கம் போல வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. கொரோனா வைரஸ் பற்றி எந்த வித அச்சமும் இல்லாமல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பூ மார்க்கெட்டுக்கு வந்து பூக்களை வாங்கிச்சென்றனர். அனைத்து பூக்களின் விலையும் மிகவும் குறைந்திருந்தது.

அந்த வகையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.240-க்கும், முல்லைப்பூ ரூ.400-க்கும், அரளி ரூ.30-க்கும், கனகாம்பரம் ரூ.200-க்கும், சம்பங்கி ரூ.30-க்கும், பட்டுப்பூ ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கும் விற்கப்பட்டது. பூக்களின் விலை குறைந்திருந்ததால் விற்பனை நன்றாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு விவசாயிகள் வழக்கம் போல காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கொரோனா வைரஸ் பீதியால் எங்கள் வியாபாரம் பாதிக்கப்படவில்லை என்று கூறிய விவசாயிகள், வரத்து அதிகரித்துள்ளதால் விலையை குறைத்து விற்பனை செய்கிறோம் என்றனர்.

பொழுதுபோக்கு அம்சமான திருப்பூர் மாநகராட்சி வெள்ளிவிழா பூங்கா பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. இதனால் அந்த பூங்கா மூடப்பட்டது.

திருப்பூர் மாநகரில் 37 தியேட்டர்கள் உள்ளன. அரசின் அறிவிப்பை தொடர்ந்து அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டன. அதுபோல் மாவட்டம் முழுவதும் உள்ள 55 தியேட்டர்களும் நேற்று மூடப்பட்டதுடன், ஒவ்வொரு தியேட்டர்கள் முன்பும் வருகிற 31-ந் தேதி வரை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் கூறும்போது, ‘தமிழக அரசின் உத்தரவின் பேரில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் மொத்தம் 169 தியேட்டர்களில் வருகிற 31-ந் தேதி வரை அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டு மூடப்பட்டன’ என்றார்.

தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதால் திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மது விற்பனை அதிகமாக காணப்படுவது வழக்கம். பார்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களும் நேற்று மூடப்பட்டன. டாஸ்மாக் கடைகள் வழக்கம் போல் செயல்பட்டன. மதுப்பிரியர்கள் மதுவை வாங்கிக்கொண்டு மறைவிடங்களில் நின்று மது அருந்திச்சென்றதை காண முடிந்தது.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் மாநகராட்சி சாா்பில், திருப்பூர் ரெயில் நிலையத்தில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளிடம் செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளர் கொரோனா வைரஸ் பரவும் முறை குறித்தும், பாதுகாப்பு முறைகள் குறித்தும், கை கழுவும் முறைகள் குறித்தும் விளக்கி கூறினர்.

ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் கைகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. மேலும் துண்டு பிரசுரங்கள் வினியோகித்தும், பொதுமக்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் போது, ‘திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வடமாநிலங்களில் இருந்து அதிகளவு தொழிலாளர்கள் வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் வடமாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. அதனால் வடமாநிலங்களில் இருந்து வரும் நபர்களை பரிசோதிப்பது மிகவும் முக்கியமானது. ஆனால் திருப்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடலின் வெப்பத்தை பரிசோதனை செய்யும் தெர்மல் கருவி இல்லை. எனவே பாிசோதனை கருவிகள் அமைத்து ரெயிலில் வரும் பயணிகளை சோதனை செய்ய வேண்டும்’ என்றனர். இதேபோல் திருப்பூர் பழைய, புதிய பஸ் நிலையங்களிலும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பின்னலாடை நகரான திருப்பூரில் உள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனங்களில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணிந்து நேற்று பணியில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டத்தில் பொது இடங்களில் மக்கள் கூட்டம் நேற்று வழக்கத்தை விட குறைவாக காணப்பட்டது.

பொதுமக்கள் தன் சுத்தம் பராமரிப்பு செய்ய வேண்டும். அனைவரும் நோய் தடுப்பு நடவடிக்கையை கடைபிடிப்பது அவசியம். ஆனால் இதற்காக பீதி அடைய தேவையில்லை என்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி; உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தள்ளிவைப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக துப்பாக்கி சுடுதல் போட்டி தள்ளி வைக்கப்படுவதாக இந்திய ரைபிள் சங்கம் நேற்று அறிவித்தது.