கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் ஏலகிரிமலையில் அனைத்து விடுதிகளும் 31-ந் தேதி வரை மூட வேண்டும் - கலெக்டர் சிவன்அருள் அறிவிப்பு


கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் ஏலகிரிமலையில் அனைத்து விடுதிகளும் 31-ந் தேதி வரை மூட வேண்டும் - கலெக்டர் சிவன்அருள் அறிவிப்பு
x
தினத்தந்தி 17 March 2020 11:15 PM GMT (Updated: 17 March 2020 11:10 PM GMT)

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் ஏலகிரிமலையில் அனைத்து விடுதிகளும் வருகிற 31-ந் தேதி வரை மூட வேண்டும் என்றும், திருப்பத்தூர் மாவட்டத்தில் காளை விடும் திருவிழா நடத்த தடை விதிக்கப்படுகிறது என்றும் கலெக்டர் சிவன்அருள் கூறினார்.

திருப்பத்தூர்,

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை யாரும் கொரோனா வைரசால் பாதிக்கப்படவில்லை. இந்த வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் சிவன்அருள் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரே‌‌ஷ் ஆகியோர் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கங்கள் அளித்தனர்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:-

கொரோனா வைரஸ் குறித்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கோவில்களில் கூட்டமாக செல்ல வேண்டாம். வயதானவர்கள், குழந்தைகள் கோவில்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

கோவில் திருவிழாக்களை தள்ளி வைக்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நாள்தோறும் கோவில்களை கண்காணித்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கோவில்களை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்க வேண்டும். அன்னதான திட்டத்திற்கு உணவு அருந்த வருபவர்கள் கிருமிநாசினி மூலம் கைகளை நன்றாக கழுவியபின்னர் உணவு பரிமாற வேண்டும்.

சுற்றுலா தலமான ஏலகிரி மலையில் அனைத்து விடுதிகளும் வருகிற 31-ந் தேதி வரை மூட வேண்டும். மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் மற்றும் கேளிக்கை பார்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

திருமண மண்டபங்களில் ஏற்கனவே பதிவு செய்த திருமணங்கள் மட்டும் நடத்த அனுமதி வழங்கப்படும். அங்கும் அளவுக்கதிகமான கூட்டங்கள் வரக்கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் காளைவிடும் திருவிழாக்கள் முற்றிலுமாக தடை விதிக்கப்படுகிறது.

காளைவிடும் விழாவிற்கு அனுமதி வாங்கி இருந்தாலும் அது ரத்து செய்யப்படுகிறது. இனிமேல் நடத்தவும் அனுமதி கிடையாது. போராட்டங்கள் ஊர்வலங்கள் நடத்த அனுமதி இல்லை. கல்லூரி பட்டமளிப்பு விழா, விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவது தள்ளி வைக்க வேண்டும். திருமண மண்டபங்களில் திருமணத்தை தவிர வேறு எந்த நிகழ்ச்சியும் நடத்த கூடாது. வெளிமாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரும் பஸ்களின் இருக்கைகளில் லைசால் கரைசல் தெளிக்க வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளை தினமும் தாசில்தார்கள் ஆய்வு செய்ய வேண்டும். சிகிச்சைக்கு வருபவர்களிடம் கொரோனா வைரஸ் போன்ற சந்தேகங்கள் ஏற்பட்டால், தனி வார்டில் வைத்து கண்காணிக்க வேண்டும். ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றால், மற்றவருக்கு பரவாமல் தடுக்க வேண்டும். அது தான் தற்போது சவாலாக இருக்கிறது. இதை அரசால் மட்டும் செய்ய முடியாது. அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தனியார் மருத்துவமனைக்கு வருவோருக்கு அறிகுறி காணப்பட்டால், அங்கு அதற்காக மருத்துவ வசதி இல்லை என்றால் பக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டும்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பஞ்சாயத்துக்கு மருந்து தெளிக்கும் ஸ்பிரேயர்கள் வாங்கி கொடுத்து பள்ளி, அங்கன்வாடி மற்றும் சமுதாயக் கூடங்களில் லைசால் கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முக கவசங்கள் தட்டுப்பாடு இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும். மருந்து கடைகளில் கூடுதல் விலைக்கு விற்றாலோ பதுக்கி வைத்தாலோ அவை பறிமுதல் செய்து குடோன்களுக்கு சீல் வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் சப்-கலெக்டர் வந்தனாகார்க், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், வாணியம்பாடி உதவி கலெக்டர் காயத்ரி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அருண்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story