அரக்கோணம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு; பயணிகள் அலறியடித்து கொண்டு ஓட்டம்


அரக்கோணம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு; பயணிகள் அலறியடித்து கொண்டு ஓட்டம்
x
தினத்தந்தி 18 March 2020 5:00 AM IST (Updated: 18 March 2020 4:59 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் வழியாக ஆலப்புழை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் குளிர்சாதன பெட்டி கழிப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அரக்கோணம்,

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம், ஆலப்புழைக்கு நேற்று முன்தினம் இரவு 9.15 மணிக்கு ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. ரெயில் திருவள்ளூர் அருகே சென்று கொண்டிருந்த போது ரெயிலில் உள்ள ஒரு குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்த பயணி ஒருவர் கழிப்பறைக்கு சென்றார்.

அப்போது கழிப்பறையில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. பாம்பை பார்த்த அவர் கழிப்பறையில் இருந்து வேகமாக வெளியே வந்து பாம்பு, பாம்பு என்று அலறி கூச்சலிட்டு உள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு மற்ற பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அந்த பெட்டியில் இருந்த பயணிகள் கழிப்பறை அருகே செல்லாமல் அவரவர் இருக்கையில் கால்களை இருக்கையில் மேல் தூக்கி வைத்து கொண்டு பயணம் செய்தனர்.

பெட்டியில் இருந்த ரெயில்வே உதவி எண்ணை பயணிகள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். சென்னை ரெயில்வே கட்டுபாட்டு அறையில் இருந்து அரக்கோணம் ரெயில் நிலைய அலுவலர், ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இரவு 10.15 மணிக்கு ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையம் முதல் பிளாட்பாரத்தில் வந்து நின்றது. ரெயில் நின்றதும் பாம்பு இருந்ததாக கூறப்படும் பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் தங்களின் உடமைகளை எடுத்து கொண்டு அலறியடித்து கொண்டு வேகமாக இறங்கி ஓடினர்.

தயார் நிலையில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர், ரெயில்வே போலீசார் பாம்பு இருப்பதாக கூறிய கழிப்பறை மற்றும் ரெயில் பெட்டி முழுவதும் தேடி பார்த்தனர். ரெயில் பெட்டியில் பாம்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. ரெயில் வேகமாக சென்று கொண்டு இருந்தபோது பாம்பு கீழே விழுந்து சென்றிருக்கலாம் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

அப்போது பயணிகள் அதிகாரிகளிடம் கூறியதாவது:-

நாங்கள் பயணம் செய்த குளிர்சாதன பெட்டி கழிப்பறையில் பாம்பு இருப்பதை பயணி ஒருவர் பார்த்து விட்டார். தற்போது பெட்டியில் பாம்பு பிடிபடவில்லை. பாம்பு இல்லை என்று தெரிவித்தாலும்கூட எங்களால் எப்படி இரவு முழுவதும் நிம்மதியாக அதே பெட்டியில் பயணம் செய்ய முடியும். ஆகவே எங்களுக்கு வேறு பெட்டியில் இடம் ஒதுக்கி தர வேண்டும் என்றனர்.

ரெயில்வே அதிகாரிகள் பயணிகளுக்கு ரெயிலில் மற்ற பெட்டிகளில் இடம் ஒதுக்கி கொடுத்தனர். ரெயில் 30 நிமிட தாமதத்திற்கு பின்னர் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து ஆலப்புழை நோக்கி புறப்பட்டு சென்றது.

இந்த சம்பவம் அரக்கோணம் ரெயில் நிலையத்திலும், ரெயிலில் பயணம் செய்த பயணிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story