கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மும்பை முதியவர் பலி நாட்டில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்வு
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மும்பையை சேர்ந்த முதியவர் பலியானார். இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்து உள்ளது.
மும்பை,
உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் மிரட்டி வரு கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனாவை பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. மேலும் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிட்டது. மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆனாலும் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே டெல்லியை சேர்ந்த 69 வயது மூதாட்டியையும், கர்நாடகாவை சேர்ந்த 76 வயது முதியவரையும் இந்த கொரோனா காவு வாங்கி இருந்தது.
மும்பையில் முதியவர் பலி
மராட்டியத்தில் 41 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்தநிலையில் நேற்று காலை 7 மணி அளவில் மும்பையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 64 வயது முதியவர் உயிரிழந்தார்.
மும்பை காட்கோபர் பகுதியை சேர்ந்த இவர், கடந்த பிப்ரவரி 22-ந் தேதி துபாய் சென்று உள்ளார். பின்னர் அங்கு இருந்து கடந்த 5-ந் தேதி மும்பைக்கு திரும்பி வந்துள்ளார். அதன்பிறகு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் மாகிம் பகுதியில் உள்ள இந்துஜா தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
கடந்த 12-ந் தேதி அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. உடனே அவர் மும்பை சின்ச்போக்லி பகுதியில் உள்ள கஸ்தூர்பா மாநகராட்சி ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான் முதியவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
மனைவி, மகன்
உயிரிழந்த முதியவரின் மனைவி மற்றும் மகனுக் கும் கொரோனா பாதிப்பு இருப்பது ஏற்கனவே கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் முதியவர் முதலில் சிகிச்சை பெற்ற இந்துஜா தனியார் ஆஸ்பத்திரி ஊழியர்கள் 80-க்கும் மேற்பட்டவர்களும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
நிமோனியா இருந்தது
இதுகுறித்து மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ் தோபே கூறுகையில், “மும்பை முதியவர் உயிரிழப்புக்கு கொரோனா மட்டுமே காரணம் என்பது உறுதிப்படுத்தபடவில்லை. அவருக்கு ஏற்கனவே வேறு சில நோய்களும் இருந்துள்ளன” என்றார்.
மும்பை மாநகராட்சி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், முதியவர் அதிக ரத்த அழுத்தம், நிமோனியா, தசைவீக்கத்தால் பாதிக்கப்பட்டு இருந்தார் என கூறப்பட்டுள்ளது.
மும்பை மாநகராட்சி கமிஷனர் பிரவின் பர்தேசி கூறுகையில், ‘‘முதியவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் மட்டும் தான் உயிரிழந்தார் என கூறிவிட முடியாது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டு இருந்த அவரின் இதய துடிப்பு உயிரிழப்பதற்கு முன் அதிகமாக இருந்தது’’ என்றார்.
மராட்டியத்தில் கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்ததன் மூலம் இந்தியாவில் இந்த உயிர்கொல்லி நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story