கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க அதிரடி: தரமற்ற உணவுகளை பரிமாறினால் ஓட்டல்களுக்கு ‘சீல்’


கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க அதிரடி: தரமற்ற உணவுகளை பரிமாறினால் ஓட்டல்களுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 17 March 2020 11:50 PM GMT (Updated: 17 March 2020 11:50 PM GMT)

புதுவையில் கொரோனா வைரஸ் தாக்குதல் நடவடிக்கையாக ஓட்டல்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தரமற்ற உணவுகளை பரிமாறினால் ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்தனர்.

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தாக்குதலை முன்னெச்சரிக்கையாக தடுக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் அருண் ஓட்டல்களில் சோதனை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி உணவு பாதுகாப்பு துறை துணை ஆணையர் இளந்திரையன், அதிகாரி தன்ராஜ் தலைமையிலான குழுவினர் நேற்று புதுவை புஸ்சி வீதியில் உள்ள ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

தரமற்ற இறைச்சிகள்

அப்போது ஓட்டல்களில் உள்ள சமையல் கூடத்தை பார்வையிட்டு அங்கு தயாரிக்கப்படும் உணவுகளை ஆய்வு செய்தனர். குளிர்சாதன பெட்டிகளில் இருந்த ஆடு, கோழி இறைச்சிகள், காய்கறிகள் தரமானதா? என்று பார்வையிட்டனர்.

அப்போது பல நாட்களாக வைக்கப்பட்டிருந்த இறைச்சிகளை குளிர்சாதன பெட்டியில் இருந்து அப்புறப்படுத்துமாறு ஓட்டல் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும் ஓட்டல்களில் கைகழுவும் இடத்தில் சோப், தண்ணீர் வைக்கப்பட்டுள்ளதா? கழிப்பறை, சமையல் கூடம் ஆகியவை சுகாதாரமாக இருக்கிறதா? என ஆய்வு செய்தனர். தரமற்ற இறைச்சி களால் தயாரான உணவுகளை பரிமாறுவது தெரியவந்தால் ஓட்டல்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

Next Story