மருத்துவ குழுவினர் சென்ற ஆம்புலன்ஸ், பாலத்தில் மோதி விபத்து ; டாக்டர் உள்பட 3 பேர் படுகாயம்


மருத்துவ குழுவினர் சென்ற ஆம்புலன்ஸ், பாலத்தில் மோதி விபத்து ; டாக்டர் உள்பட 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 19 March 2020 3:45 AM IST (Updated: 18 March 2020 6:24 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே கொரோனா நோய் தடுப்பு மருத்துவ குழுவினர் சென்ற ஆம்புலன்ஸ், பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் டாக்டர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

வாணியம்பாடி, 

கொரோனா வைரஸ் பரவுவதையொட்டியும் சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் வாணியம்பாடி பகுதியில் உள்ள கிராமங்களுக்கு மருத்துவ குழுவினர் ஆம்புலன்சில் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஆம்பூர் அருகே உள்ள பச்சூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பீனா சவுமியா ராய், செவிலியர் சந்தியா ஆகியோர் ஆம்புலன்ஸ் வேனில் நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள கிராமங்களில் பரிசோதனை செய்து சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். ஆம்புலன்சை டிரைவர் ராஜாமணி ஓட்டிச்சென்றார். அவர்களது ஆம்புலன்ஸ் வாணியம்பாடியை கடந்து தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளியை நெருங்கிக்கொண்டிருந்தது.

கேத்தாண்டபட்டியில் உள்ள பாலத்தின் மீது சென்றபோது திடீரென டிரைவரின் கடடுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் தறிகெட்டு ஓடியது. இதனால் அந்த ஆம்புலன்ஸ் பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதிலிருந்த டாக்டர் பீனாசவுமியாராய், செவிலியர் சந்தியா மற்றும் டிரைவர் ராஜாமணி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். ஆம்புலன்சும் தடுப்புச்சுவரில் தொங்கிக்கொண்டிருந்தது.

தகவல் அறிந்த வாணியம்பாடி போலீசார் விரைந்து சென்று ஆம்புலன்சுக்குள் படுகாயத்துடன் துடித்த டாக்டர் உள்பட 3 பேரையும் மீட்டனர். பின்னர் டாக்டர் பீனாசவுமியாராயை சிகிச்சைக்காக வாணியம்பாடியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்ற 2 பேரும் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். 3 பேருக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அதனை தொடர்ந்து மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு பாலத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஆம்புலன்சை வெளியே கொண்டு வந்தனர். இந்த விபத்து குறித்து வாணியம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடததி வருகின்றனர்.

Next Story