சங்கரன்கோவிலில் குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


சங்கரன்கோவிலில் குடிநீர் கேட்டு  நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 19 March 2020 4:00 AM IST (Updated: 18 March 2020 9:12 PM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் நேற்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

சங்கரன்கோவில், 

சங்கரன்கோவிலில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் நேற்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

முற்றுகை போராட்டம் 

சங்கரன்கோவில் திருவள்ளுவர்நகர் பகுதியில் 16 நாட்கள் ஆகியும் குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த முறை குடிநீர் வினியோகித்தபோது, ராஜபாளையம் சாலையில் பகிர்மான குழாய் பதிக்கும்போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் வழக்கத்தை விட 3 நாட்கள் கழித்து குடிநீர் விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது மீண்டும் குடிநீர் பகிர்மான குழாயில் உடைப்பு ஏற்பட்டதாகவும், இதனால் குடிநீர் இன்னும் 4 நாட்கள் கழித்து விடப்படும் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு, நேற்று முன்தினம் லாரி மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. ஆனால் 300–க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள அந்தப்பகுதியில் பெரும்பாலானவர்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ராஜபாளையம் சாலையில் உள்ள பகிர்மான குழாய் உடைப்பை உடனே சரிசெய்து திருவள்ளுவர்நகர் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கக்கோரி நடந்த இந்த போராட்டத்துக்கு பாரதிய மஸ்தூர் சங்க செயலாளர் பாடாலிங்கம் தலைமை தாங்கினார்.

பேச்சுவார்த்தை 

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் குடிநீர் வழங்கக்கோரி கோ‌ஷங்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து நகராட்சி சுகாதார அலுவலர் பாலசந்தர், மேலாளர் லட்சுமணன் ஆகியோர் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில், “பிற்பகலில் குழாய் உடைப்பை சரி செய்து உடனே குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனக்கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். முற்றுகை போராட்டத்தில் முன்னாள் நகராட்சி கவுன்சிலர் முப்பிடாதி மற்றும் பெண்கள் உள்ளிட்ட 100–க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

Next Story