தீயணைப்பு வீரர்கள் போராட்டம்; வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 3–வது நாளாக எரியும் தீ
நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 3–வது நாளாக தீ எரிகிறது. இதனை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் தீ பற்றினால் அதை அணைப்பது மிகவும் சிரமம் ஆகும். ஏன் எனில் சுமார் 10 ஏக்கர் அளவுக்கு குப்பைகள் மலை போல குவித்து வைக்கப்பட்டு இருப்பதால் தீயை அணைப்பது தீயணைப்பு வீரர்களுக்கு பெரிய சவாலாகவே இருக்கிறது.
இந்த நிலையில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் கடந்த 16–ந் தேதி தீ பற்றியது. இதுபற்றிய தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனே சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். எனினும் கடந்த 2 நாட்களாக தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.
இதனால் நேற்று 3–வது நாளாக வலம்புரிவிளை குப்பை கிடங்கில் தீ பற்றி எரிந்தது. இதைத் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியை தீயணைப்பு வீரர்கள் நேற்று காலை மீண்டும் தொடங்கினார்கள். நிலைய அதிகாரி துரை தலைமையில் சுமார் 40 தீயணைப்பு வீரர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில், தக்கலை மற்றும் கன்னியாகுமரி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டு பணிகள் நடந்தன. மேலும் 5 பொக்லைன் எந்திரங்கள் மூலமாக குப்பைகளை அடிப்பகுதி வரை கிளறிவிட்டு தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் காற்று பலமாக வீசுவதாலும், வெயில் சுட்டெரித்து வருவதாலும் தீயை அணைக்க முடியவில்லை. இருந்தாலும் தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே தீ தொடர்ந்து எரிந்து வருவதால் அப்பகுதி முழுவதுமாக நச்சு புகை பரவியுள்ளது. இதனால் அப்பகுதி புகை மண்டலத்தால் சூழப்பட்டு இருப்பது போல காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் சிரமப்படுகிறார்கள்.
மேலும் நச்சு புகையால் பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே குப்பை கிடங்கில் பற்றி எரியும் தீயை உடனே அணைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில் வலம்புரிவிளையில் பரவியுள்ள புகையின் அளவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து அளவீடு செய்தனர்.
இதுபற்றி தீயணைப்பு வீரர்களிடம் கேட்டபோது, “வலம்புரிவிளை குப்பை கிடங்கில் சுமார் 5 ஏக்கர் வரை தீ பற்றி எரிகிறது. குப்பை குவியலின் அடிப்பகுதி வரை தீ பரவி இருப்பதால் உடனடியாக அணைக்க முடியவில்லை. இதனால் பொக்லைன் எந்திரங்கள் மூலமாக குப்பைகளை கிளறிவிட்டு தீயை அணைக்கும் பணியில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகிறோம்“ என்றனர்.
Related Tags :
Next Story