தமிழக எல்லையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்: கேரள வாகனங்கள் தடுத்து நிறுத்தம் திருப்பி அனுப்பப்பட்டதால் பரபரப்பு


தமிழக எல்லையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்: கேரள வாகனங்கள் தடுத்து நிறுத்தம்  திருப்பி அனுப்பப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 March 2020 4:30 AM IST (Updated: 18 March 2020 7:39 PM IST)
t-max-icont-min-icon

தமிழக எல்லையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தென்காசி, 

தமிழக எல்லையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி கேரள வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன 

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கும், அது மேலும் பரவாமல் இருப்பதற்கும் தமிழக அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழக அரசின் உத்தரவுப்படி தென்காசி மாவட்டத்தில் ஏற்கனவே பள்ளிக்கூடங்கள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கிருந்து தமிழகத்திற்கு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், தமிழகம்– கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் மற்றும் கேரள அரசு பஸ்கள் மட்டும் இரு மாநிலங்களுக்குள் சென்று வர அனுமதிக்கப்படுகின்றன. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை அனைத்து வாகனங்களும் புளியரை சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன.

பரபரப்பு 

அதே போல் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு வாகனங்கள் செல்லாமல் திருப்பி அனுப்பப்படுகின்றன. இவற்றில் துக்க வீடுகளுக்கு செல்பவர்கள், ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகள், நீதிமன்றங்களுக்கு செல்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இந்த சோதனையில் தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். கேரள வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென்காசி புதிய பஸ்நிலையத்தில் கேரள அரசு பஸ்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டன. அந்த பஸ்சில் இருந்து இறங்கி வரும் பயணிகளுக்கு பஸ்நிலையத்தில் கைகளை கழுவ நகரசபை நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி பயணிகள் தங்கள் கைகளை திரவம் மற்றும் சோப்பு போட்டு கழுவிச் சென்றனர்.

Next Story