போக்குவரத்து போலீசாருக்கு எலுமிச்சை சாறு; தண்ணீர் பந்தலும் திறக்கப்பட்டது
கோடை வெயிலை சமாளிக்க குளித்தலை போக்குவரத்து போலீசாருக்கு எலுமிச்சை சாறு வழங்கப்பட்டு, பொதுமக்களுக்கான தண்ணீர் பந்தலும் திறக்கப் பட்டது.
குளித்தலை,
கரூர் மாவட்டத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டது. இந்த வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்துள்ளதால், குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவது, பஸ் நிலையம்-மருத்துவமனை உள்பட பொதுமக்கள் கூடும் இடங்களில் குடிநீர் வைப்பது என மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது கரூர் மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் அமராவதி ஆறு வறண்டு பாலைவனம் போல் மணற்பாங்காக காட்சியளிப்பதால், நிலத்தடி நீர்மட்டமும் சற்று குறைந்து வருகிறது. இதன் காரணமாக தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்தநிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில், காலை, மாலை வேளையில் போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசார் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோடை வெயிலை சமாளிக்க கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், போக்குவரத்து போலீசார் சார்பில் போக்குவரத்து போலீசாருக்கு எலுமிச்சைசாறு, நீர்மோர், தர்பூசணி மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு கும்மராஜா தலைமை தாங்கி தண்ணீர் பந்தலை திறந்துவைத்தார்.
பின்னர் போக்குவரத்து போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் நீர் மோர், எலுமிச்சைசாறு, தர்பூசணி பழங்களை வழங்கினார். மேலும் போலீசாருக்கு சோலார் தொப்பிகள் வழங்கப்பட்டது. இதில் குளித்தலை போக்கு வரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் வெயிலில் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும், உடல்நல பராமரிப்புகள் குறித்தும் போலீசாருக்கு ஆலோசனை வழங்கப் பட்டது.
Related Tags :
Next Story