தூத்துக்குடிக்கு பஸ்சில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலை மீட்பு 2 பேரிடம் விசாரணை
தூத்துக்குடிக்கு பஸ்சில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலையை போலீசார் மீட்டனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடிக்கு பஸ்சில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலையை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்காணிப்பு
தூத்துக்குடிக்கு சாமி சிலைகள் கடத்தி கொண்டு வரப்படுவதாக, தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் தேனியில் இருந்து தூத்துக்குடிக்கு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சில் இருந்து வாலிபர் ஒருவர் மடிக்கணினி பையுடன் கீழே இறங்கினார். அவரை போலீசார் கண்காணித்தனர். அப்போது அந்த வாலிபரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
ஐம்பொன் சிலை மீட்பு
பின்னர் அவர் வைத்து இருந்த மடிக்கணினி பையை போலீசார் திறந்து சோதனை செய்தனர். அப்போது அந்த பையில் மடிக்கணினிக்கு பதிலாக சுமார் முக்கால் அடி உயரத்தில் 3 கிலோ எடை கொண்ட சாமி சிலை இருந்தது. இதனால் போலீசார் அந்த சிலையை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த சிலையானது ஐம்பொன்னால் செய்யப்பட்ட தெய்வானை அம்பாளின் சிலை என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடகரையைச் சேர்ந்த சசிகுமார் மகன் சாம் (வயது 23) என்பது தெரிய வந்தது.
2 பேரிடம் தீவிர விசாரணை
தொடர்ந்து போலீசார் சாமிடம் நடத்திய விசாரணையில், அந்த சிலையை வாங்குவதற்காக, ஏரலை சேர்ந்த இசக்கிமுத்து மகன் லிங்ககுமார்(22), தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் பதுங்கி இருந்ததை அறிந்தனர். உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று அவரையும் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்த செல்போன்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீட்கப்பட்ட ஐம்பொன் சிலையின் மதிப்பு சுமார் ரூ.1 கோடி ஆகும். ஐம்பொன் சிலையை சாமிடம் கொடுத்து அனுப்பியது யார்?, அதனை யாரிடம் விற்பதற்காக கொண்டு வந்தார்? அந்த சிலையை எங்கிருந்து எடுத்து வந்தனர்? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் ரூ.1 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலை மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story