மாவட்ட செய்திகள்

கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல் + "||" + Can apply for an academic loan; Collector Information

கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்

கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் தாட்கோ மூலமாக தொழில் முறை, தொழில் நுட்ப படிப்புகளுக்கு கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை, 

தாட்கோ மூலமாக தேசிய பட்டியல் இனத்தோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் திட்டத்தின் கீழ் முழு நேர தொழில் முறை, தொழில் நுட்ப படிப்புகளுக்கு இந்திய நாட்டிற்குள் படிப்பதற்கு ரூ.10 லட்சம் வரை மற்றும் வெளி நாட்டில் சென்று படிப்பதற்கு ரூ.20 லட்சம் வரை கல்வி கடன் பெற ஆதிதிராவிடர் இனத்தவர்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரடியாக பெற்று கொள்ளலாம். அல்லது தேசிய பட்டியல் இனத்தோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் https://nsfdc.nic.in/UploadedFiles/other/form/educationloan.pdf என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் குடும்ப அட்டை, சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் புகைப்படம் 2, கல்வித்தகுதி சான்றிதழ், ஆதார் அட்டை, சாதி சான்று, வருமான சான்று ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்லூரியில் ஏற்கனவே செலுத்தப்பட்ட தொகையின் ரசீது, மதிப்பெண் சான்றிதழ், வெளிநாட்டில் சென்று படிப்பவர்களுக்கு பாஸ்போர்ட் மற்றும் விசா ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பதற்கான நிபந்தனைகள் மனுதாரரின் மனுவில், கடனாக கோரப்படும் மொத்த நிதியை ஆண்டு வாரியாகவும், இனங்கள் வாரியாகவும் தனித்தனியே பட்டியலிட்டு காட்ட வேண்டும்.

கடனுதவி கோரும் கடன் தொகைக்கு எல்.ஐ.சி. போன்ற பெயர் பெற்ற காப்பீட்டு நிறுவனங்களில் மனுதாரரின் பெயரில் காப்பீடு செய்து சேர்க்க வேண்டும். 

மேலும் அரசு பணியில் உள்ளவர் ஜாமீன் கையொப்பமிட வேண்டும். பருவக்கடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். கடன்தொகை விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து வட்டி வசூல் செய்ய வேண்டும். கடன் தொகை செலுத்த தவறும் பட்சத்தில், நிலுவைத்தொகையில் ஆண்டுக்கு 2 சதவீதம் அபராத வட்டி செலுத்த வேண்டும்.

இதுதவிர விண்ணப்பத்தாரருக்கு வழங்கப்படும் கடன் 5 ஆண்டுகளில் திரும்ப செலுத்தப்பட வேண்டும். படிப்பு முடித்த 6 மாதம் அல்லது வேலைக்கு செல்லுதல் இதில் எது முன்னரோ, அன்றைய மாதத்தில் இருந்து அசல் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் கல்வி நிறுவனம், மாநில அரசு மற்றும் வேறு எந்த ஆதாரம் வாயிலாக உதவித்தொகை, சலுகை, இலவசம் பெற்று இருப்பின், கடன் தொகை என்.எஸ்.எப்.டி.சி. சார்பு அடிப்படையில் கட்டுப்படுத்தப்படும். கல்விக்கடன், கடனாக நிலுவையில் இருக்கும்போது பிறருக்கு வழங்கப்படாது அல்லது மாற்றப்படாது. 

ஒரு விண்ணப்பதாரர் டிப்ளமோ, பட்டப்படிப்பு அல்லது முதுகலை பட்டப்படிப்பு டிப்ளமோ, முதுகலை பட்டப்படிப்பு ஏதாவது ஒன்றிற்கு மட்டுமே கல்விக்கடன் பெற இயலும். மேலும் தகவலுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.