நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் வியாபாரி, தொழிலாளி அனுமதி தூத்துக்குடியில் 2 பேருக்கு சிகிச்சை


நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் வியாபாரி, தொழிலாளி அனுமதி  தூத்துக்குடியில் 2 பேருக்கு சிகிச்சை
x
தினத்தந்தி 18 March 2020 10:00 PM GMT (Updated: 18 March 2020 3:17 PM GMT)

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் வியாபாரியும், தொழிலாளியும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

நெல்லை, 

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் வியாபாரியும், தொழிலாளியும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தூத்துக்குடியில் 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா சிறப்பு வார்டு 

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. கொரோனா வைரஸ் அறிகுறியுடன் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் உள்ள நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 8 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு பரிசோதனை மையமும் அமைக்கப்பட்டு உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டியைச் சேர்ந்த 27 வயதான வாலிபர், துபாய்க்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு வந்தார். அவருக்கு சளி, இருமல், காய்ச்சல் இருந்தது. அந்த வாலிபரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அங்கு அவருக்கு ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார்.

சாதாரண காய்ச்சல் 

இதேபோன்று வெளிநாட்டில் இருந்து திரும்பிய பேட்டையைச் சேர்ந்த 40 வயதான ஒருவர் காய்ச்சல் காரணமாக கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தவுடன் வீடு திரும்பினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து சொந்த ஊரான விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அடையகருங்குளத்துக்கு வந்த தொழிலாளி ஒருவருக்கு காய்ச்சல் இருந்ததால், ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரியும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு சாதாரண காய்ச்சல் என்பது உறுதிப்படுத்தப்பட்டதால், அவரை சாதாரண வார்டுக்கு மாற்றி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் 2 பேர் அனுமதி 

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த 35 வயதான வியாபாரிக்கும், விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த 69 வயதான தொழிலாளிக்கும் சளி, இருமல், காய்ச்சல் இருந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்களது ரத்த மாதிரியை எடுத்து ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் 

இதற்கிடையே, தூத்துக்குடியைச் சேர்ந்த மத்திய தொழில்பாதுகாப்பு படை வீரர் ஒருவர் அசாம் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு ரெயிலில் வந்தார். பல்வேறு மாநிலங்களின் வழியாக பயணம் செய்து வந்த அவருக்கு காய்ச்சல் மற்றும் தொண்டையில் வலி ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் தூத்துக்குடி துறைமுகம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்ற அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, அங்கு தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

நேற்று அவரது ரத்த மாதிரியை எடுத்து ஆய்வுக்காக நெல்லை ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். 24 மணி நேரத்துக்கு பின்னரே அவரது ரத்த மாதிரியின் ஆய்வு முடிவு தெரியவரும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஒரிசா மாநில வாலிபர் 

இதேபோன்று ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த சிலர், விருதுநகர் மாவட்டம் அருகே ஏழாயிரம்பண்ணையில் உள்ள சோலார் மின் உற்பத்தி நிறுவனத்தில் தங்கியிருந்து தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்வதற்காக ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த 18 வயதான வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் ரெயிலில் வந்தார். அவர் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களின் வழியாக ரெயிலில் பயணம் செய்து வந்ததால், அவருக்கு காய்ச்சல், இருமல் ஏற்பட்டது.

இதையடுத்து நேற்று கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த அந்த வாலிபரை டாக்டர்கள், தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது ரத்த மாதிரியை ஆய்வுக்கு அனுப்ப டாக்டர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

Next Story