கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் மூடல்


கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் மூடல்
x
தினத்தந்தி 18 March 2020 10:30 PM GMT (Updated: 18 March 2020 3:39 PM GMT)

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் வருகிற 31-ந்தேதி வரை மூடப்படுகிறது.

மீன்சுருட்டி, 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியாவில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வருகிற 31-ந்தேதி வரை பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும் கோவில்களுக்கு வரும் பக்தர்களையும், சுற்றுலா பயணிகளையும் சுகாதார துறை மூலம் நவீன கருவிகள் கொண்டு பரிசோதனை செய்து அனுப்பி வந்தனர்.

ஆனால் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் பாதுகாப்பில் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலுக்குள் பரிசோதனை செய்யப்படாமலேயே பக்தர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சென்று வந்தனர்.

தற்போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் நினைவு சின்னம் வருகிற 31-ந்தேதி வரை மூடப்படுகிறது என்று இந்திய அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை சென்னை கோட்டம் சார்பில் அறிவிப்பு பதாகை கோவில் முன்பு இரும்பு கேட்டில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பு நேற்று காலை முதல் நடைமுறைக்கு வந்தது. இதனால் 31-ந்தேதி வரை கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல முடியாது. கோவில் மூடப்பட்டது இதுவே முதல் முறையாம். ஆனால் கோவிலில் வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும். 

மேலும் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கோவில் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிப்பான் மூலம் தெளிக்கப்பட்டு வருகிறது. கோவில் மூடப்பட்டதால் நேற்று கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதே போல் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வாலிகண்டபுரத்தில் இந்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வாலீஸ்வரர் கோவில் நினைவு சின்னமும் தற்போது கொரோனா வைரசுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வருகிற 31-ந்தேதி வரை மூடப்படுகிறது. 

அந்த உத்தரவு நேற்று காலை முதல் அமலுக்கு வந்தது. இது தொடர்பாக அறிவிப்பு பதாகை கோவிலின் முன்பு உள்ள இரும்பு கேட்டில் வைக்கப்பட்டுள்ளது.

Next Story